Tuesday, October 26, 2010

நேர்காணல்


மயிலங்கூடலூர் பி.நடராஜன்

நேர்காணல் மற்றும் படங்கள்: இயல்வாணன்



வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டிருக்கும் பல கிராமங்களுள் ஒன்று மயிலங்கூடல் ஆகும். ஈழத்து கலை,இலக்கியத் துறைக்கு வலுச் சேர்த்த பலர் இக்கிராமத்தவர்களாவர். அவ்வகையில் தனது பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்திருக்கும் நடராஜன் அவர்கள் அடக்கமாக இருந்து பல செயல்களை ஆற்றிய பெரியாராவார். தற்போது செம்மணி வீதி நல்லூரில் நோய்வாய்ப்பட்டு பல விடயங்களையும் ஞாபகப்படுத்த இயலாத நிலையில் இருந்த அவரை கேசரிக்காக நேர்கண்டோம்.
கேள்வி நீங்கள் கவிஞராக,விமர்சகராக,எழுத்தாளராகப் பல தளங்களிலும் பயணித்துள்ளீர்கள்.முதலில் உங்களைப் பற்றி, உங்களது சிறுபராய வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்.
பதில் நான் 14.10.1939இல் யாழ்ப்பாணத்தின் வடக்கே மயிலங்கூடல் என்ற கிராமத்தில்
பிறந்தேன்.அப்பா கொழும்பில் கடை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஐந்து
பெண்களும் மூன்று ஆண்களுமாக எட்டுப் பிள்ளைகள். குடும்பத்தை அம்மாவே வழிநடத்தினார். நான் சிறுவனாக இருக்கும் போதே அப்பா இறந்து விட்டார். அதன் பின் முழுக் குடும்பப் பாரமும் அம்மாவின் தலையிலே வந்தது.பின்னர் பெரியண்ணாவிடம் குடும்பப் பொறுப்பு சென்றது.
எனக்கு வீட்டில் அம்மாவே கற்பிப்பார்.ரியூசன் அப்போது இல்லை. நான் ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம், பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை,இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி ஆகியவற்றில் கற்றேன். ஐந்தாம் வகுப்பில் எனக்கு இரட்டை வகுப்பேற்றம் கிடைத்தது. இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பெற்றேன்.
ஹென்றியரசர் கல்லூரில் படிக்கும் போது எனது சகபாடியாக இருந்தவரது வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருந்தன.விடுமுறை நாட்களில் அங்கு சென்று நூல்களை வாசிப்பேன். எனது வாசிப்பு ஆர்வத்தை வளர்த்த முதற்களம் நண்பனது வீடுதான்.
கேள்வி உங்களது உருவாக்கத்துக்கு உந்துசக்தியாக இருந்தது வீடா பாடசாலையா?
பதில் இரண்டும் மூலகாரணமாக இருந்துள்ளன.ஆயினும் எனது ஆசிரியர்களை முக்கியமாகச் சொல்ல வேண்டும். நான் மகாஜனக் கல்லூரியில் ஆங்கில மொழி மூல அறிவியல் துறை மாணவனாகப் பயின்றேன். அவ்வேளை தமிழும்,சமயமும் தமிழில் கற்பிக்கப்பட்டன. அவற்றைக் கற்பித்த ஆசிரியர்கள் மூலம் எனக்குத் தமிழ்ப்பற்று ஏற்பட்டது.எனது ஆசிரியர் கவிஞர் கதிரேசர்பிள்ளை பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் என்னைப் பங்குபற்ற வைத்து ஊக்கமளித்தார். அதேபோல எனது அயலவரான பண்டிதர் சி.அப்புத்துரை நல்ல நூல்களைத் தேர்ந்து படிக்க வழிகாட்டினார்.
உயர்தரக் கல்வியை இடையில் நிறுத்த வேண்டியேற்பட்டது.அதன்பின் தமிழார்வம் காரணமாக பண்டிதர் செ.கதிரேசர்பிள்ளைஅவர்களிடமும், விழிசிட்டியில் பண்டிதர் வே.சங்கரப்பிள்ளை அவர்களிடமும் இலக்கணம் பயின்றேன். அவர்கள் என்னை மல்லாகத்தில் நடைபெற்ற பண்டித வகுப்பில் சேர்த்து விட்டனர். அங்கு அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி,அமரர் பண்டிதர் பொன்னுத்துரை, பண்டிதர் நாகலிங்கம் எனப் பலரிடமும் கற்க முடிந்தது.அங்கே பால பண்டித பரீட்சையில் சித்தியடைந்தேன். பண்டித பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த போது வவுனியாவில் ஒரு பாடசாலையை ஆரம்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனால் பரீட்சை எடுக்கவில்லை.
கேள்வி பாடசாலையை எவ்வாறு ஆரம்பித்தீர்கள்?
பதில் பொருத்தமான இடங்களில் பாடசாலைகளை அமைத்தால் அவற்றை அரசாங்கம் பொறுப்பேற்கும் நிலை அப்போது இருந்தது.எனது அக்கா குடும்பம் வவுனியா இராசேந்திர குளத்தில் இருந்தது. அத்தான் வவுனியாவில் ஒரு பாடசாலையை அமைக்க முடியும் என்று அறிவித்தார். நான் அங்கு சென்று வண்ணான்சின்னக்குளம் என்ற இடத்தில் ஒரு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை ஆரம்பித்தேன்.காலப் போக்கில் என்னுடன் இரு ஆசிரியர்களும் இணைந்து கொண்டனர். ஆசிரிய பயிற்சியின் பொருட்டு யாழ்ப்பாணம் வந்த பின்னர் இங்கேயே தங்கி விட்டேன்.
கேள்வி சிறுவர் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளீர்கள்.நூல்களையும் வெளியிட்டுள்ளீர்கள். அவற்றை எழுதத் தூண்டியவர்கள் யார்?
பதில் உயர்தரப் படிப்பை இடைநிறுத்திய பின்னர் சில கவிதைகள் எழுதினேன். அவற்றை எனது குருநாதர் பண்டிதர் கதிரேசர்பிள்ளையிடம் காண்பித்தேன். அவர் எனக்கு யாப்பிலக்கணம் கற்பித்தார். அதன் பின் நான் கவிதைகளும்,சிறுவர் பாடல்களும் எழுதினேன்.புகழ்பெற்ற ஆங்கில சிறுவர் பாடல்களையும் மொழியாக்கம் செய்தேன். ஆசிரியராகப் பணியாற்றிய வேளை சிறுவர் பாடல்களை எழுதி மாணவர்களைக் கொண்டு பாடுவிக்கவும் முடிந்தது. இவற்றை ஆடலிறை சிறுவர் பாடல்கள்,ஆடலிறை குழந்தைப் பாடல்கள் என இரு தொகுதி நூல்களாக வெளியிட்டு உள்ளேன்.
கேள்வி வெறுமனே புலம்பல்களையும்,அஞ்சலிச் செய்திகளையும்,உவப்பற்ற விடயங்களையும் தாங்கியே கல்வெட்டு எனப்படும் நினைவு மலர்கள் வெளிவந்த சூழலில் சிறுவர் இலக்கியத்தைக் கல்வெட்டுக்களில் இடம்பெறச் செய்த பெரும்பணியை ஆற்றியுள்ளீர்கள்.அவ்வாறு செய்வதற்கு உங்களுக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் யாவர்?
பதில் எனது ஆசிரியர் பண்டிதர் செ.கதிரேசர்பிள்ளை மகாஜனக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் இறந்த போது அவரது நினைவாக மகாஜனவின் ஆசிரியர்கள், மாணவர்களின் குழந்தைப் பாடல்களைத் தொகுத்து கல்வெட்டாக வெளியிட்டார். அதுபோல பண்டிதர் சி.அப்புத்துரை தனது சகோதரி இறந்த போது அவரது நினைவாக மழலைச் செல்வம் என்ற பெயரில் குழந்தைப் பாடல்களை வெளியிட்டார்.
அவர்களைப் பின்பற்றி நானும் பல நினைவு மலர்களில் குழந்தைப் பாடல்களை இடம்பெறச் செய்தேன். என்னிடம் நினைவு மலரை ஆக்கித் தருமாறு கேட்பவர்களிடம் கழந்தைப் பாடல்களை வெளியிடுமாறு சிபார்சு செய்வேன். குழந்தைப் பாடல்கள் சிறுவர்களால் மட்டுமல்ல பெரியவர்களாலும் ரசித்துப் படிக்கப்படுபவையாகும்.ஈழத்துக் குழந்தைக் கவிதைகளை எல்லோரும் அறியச் செய்வதற்கும், அவற்றைப் பயில்வதற்குமான எளிமையான வழியாக நினைவு மலர்களைப் பயன்படுத்திக் கொண்டேன். தில்லைச்சிவன், கல்வயல் வே.குமாரசாமி, மு.பொன்னம்பலம், சபா.ஜெயராசா, குறமகள், புத்தொளி ந.சிவபாதம், பா.சத்தியசீலன் எனப் பல படைப்பாளிகளும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கேள்வி சிறுவர் இலக்கியத் துறையில் நிறைந்த பங்களிப்பை ஆற்றியுள்ளீர்கள்.சிறுவர் இலக்கியம் சிறார் உளவியல் சார்ந்து அமைய வேண்டுமெனக் கூறப்படுகிறது. உளவியல் கற்ற ஒரு ஆசிரியர் என்ற வகையில் இது பற்றிய உங்களது கருத்தென்ன?
பதில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை முதலியன சிறுவர் இலக்கியம் என்றே கூறப்படுகின்றன.ஆனால் இவை சிறுவர் அறிந்த கருத்துக்களை அவர்களது நோக்கில் நின்று கூறவில்லை.எளிமையான சொற்களும் இவற்றில் இல்லை.
சிறுவர் இலக்கியங்கள் சிறுவர் நிலை நின்று அவர்களது தேவைகள்,விருப்பங்கள் சார்ந்து அமைய வேண்டும்.அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.இன்று அவ்வாறான பாடல்களும், கதைகளும்,நாடகங்களும் வெளிவந்துள்ளன. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு நாடாக்கள், இறுவட்டுக்களும் சிறுவர் இலக்கியங்களைத் தாங்கி வெளிவந்துள்ளன.
1985இல் நான் யாழ்ப்பாணம் ஆசிரிய வள நிலையத்துக்குப் பொறுப்பாக இருந்த போது யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் சிறுவர் இலக்கியக் கருத்தரங்கொன்றையும், கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தேன். க.பொ.த.உயர்தர மாணவிகளுக்கு குழந்தைக் கவிதைகள் எழுதும் பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில் மாணவிகளால் எழுதப்பட்ட குழந்தைக் கவிதைகள் பாலர் பா அமுதம் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.இன்று பலரும் சிறுவர் பாடல்களை எழுதி வருவது ஆரோக்கியமானதாகும்.
கேள்வி பதிப்பு மற்றும் தொகுப்பு முயற்சிகள் பலவற்றில் உங்ளது பணி விதந்து கூறப்படுகிறது. அவற்றைப் பற்றிக் கூறுங்கள்.
பதில் மல்லாகத்தில் பண்டித வகுப்பில் படித்த வேளை பண்டிதம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தேன். பலாலி ஆசிரிய கலாசாலையில் படித்த வேளை அறிவியல் சஞ்சிகையான சுடரின் ஆசிரியராக இருந்தேன். சுடர் ஆரம்பத்தில் தட்டச்சுப் பிரதியாக வெளிவந்தது.இதைப் பின்னர் அச்சுப் பிரதியாகக் கொண்டு வந்தேன்.இது நடந்தது 1965-66இல்.
தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தில் பணியாற்றும் வேளை அந்நிலையத்தின் ஆங்கில செய்தி ஏடான குறுஊ நேறள டுநவவநச ஐ அதன் ஆசிரியராக இருந்து 1978 முதல் 1984 வரை வெளியிட்டேன்.
பதிப்பு என்ற வகையில் 1972ஆம் ஆண்டு முன்னாள் வீரகேசரி ஆசிரியர் ஆ.சிவனேசச் செல்வனுடன் இணைந்து அமரர் பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டேன். அவருடன் இணைந்து மறுமலர்ச்சிக் காலம் -இலக்கியச் சிறப்பிதழ் என்ற நூலை வெளியிட்டேன். தெல்லிப்பழை கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் இந்நூல் வெளியிடப்பட்டது.
1971 முதல்1976 வரை வெளிவந்த மகாஜனன் இதழ்களின் பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளேன். எனது ஆசிரியர் அமரர் வித்துவான் க. சொக்கலிங்கத்தின் மணிவிழா மலரை அமரர் மூதறிஞர் வரதருடன் இணைந்து வெளியிட்டேன்.
1977இல் வித்துவான் சொக்கலிங்கம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தை ஆரம்பித்த போது நானும் அதில் இணைந்து செயற்பட்டேன். கழகம் வெளியிட்ட ஐந்து நூல்களைப் பதிப்பிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை,பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன், அ.சண்முகதாஸ்,நா.சுப்பிரமணியன்,கலாநிதி க.சொக்கலிங்கம் ஆகியோரின்தமிழியல் ஆய்வு நூல்களை அப்போது பதிப்பித்தேன்.
சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி ஆக்கமும் ஆளுமையும் என்ற நூலைத் தொகுத்ததுடன் பாவலர் துரையப்பாபிள்ளையின் சிந்தனைச் சோலையை மீள்பதிப்புச் செய்தேன். அத்துடன் இடப்பெயர் ஆய்வு,கைலாயமாலை ஆகிய நூல்களையும் பதிப்பித்தேன்.
கலாநிதி க.சொக்கலிங்கத்துடன் இணைந்து கட்டுரைக்கோவை நூலையும்,பேராசிரியர் சி.சிவலிங்கராசாவுடன் இணைந்து தமிழியற் கட்டுரைகள் நூலையும் எழுதியுள்ளேன். அர்ச்சுனா சஞ்சிகையில் எழுதிய சுதந்திரமாகப் பாடுவேன் மொழியாக்கத் தொடர் வரதர் கதை மலர் வெளியீடாக நூலுருப் பெற்றுள்ளது.
இலக்கியம்,வரலாறு,அறிவியல்,கல்வியியல் சார்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஆடலிறை,செந்தூரன்,பொய்கையார்,காங்கேசன்,கூத்தன்,நடராஜ மைந்தன், திருப்பெருந்துறை இறை எனப் பல புனை பெயர்களிலும் எழுதியுள்ளேன். பலவற்றை இப்போது ஞாபகப்படுத்த முடியாதுள்ளது.
கேள்வி நமது சூழலில் பதிப்பு மற்றும் தொகுப்பு முயற்சிகள் எவ்வாறு உள்ளன எனக் கூற முடியுமா?
பதில் தமிழில் பதிப்பு முயற்சியின் முன்னோடிகள் ஆறுமுக நாவலரும்,சி.வை.தாமோதரம் பிள்ளையுமே.அவர்களே பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த முன்னோடிகளாவர்.இவர்களைப் பின்பற்றியே உ.வே.சாமிநாத ஐயர் போன்றோர் பதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது அச்சுமுறை வளர்ச்சியடையாமையால் பதிப்பு முயற்சிகளும் அதிகளவில் இடம்பெறவில்லை. இன்று கணனித்தொழிநுட்பத்தின் வளர்ச்சி பதிப்புத் துறையை வளர்த்துள்ளது.பதிப்பக வெளியீடுகள்,நூலாசிரியர்களது வெளியீடுகள்,இதழ் நிறுவன வெளியீடுகள், தொகுப்பு நூல்கள் எனப் பலவாறாக இன்று நூல்கள் வெளியிடப்படுகின்றன.
இவ்வகையில் பெருந் தொகையான அன்பளிப்பு நூல்களை வெளியிட்ட மில்க்வைற் நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.பதிப்பு முயற்சியில் அதிகம் பங்களிப்புண்டு.தொகுப்பு என்ற வகையில் இங்கும், புலம்பெயர் சூழலிலும் பல வெளிவந்துள்ளன. எனது ஞாபகத்தில் உள்ளபடி கவிதைச் செல்வம்,ஈழத்துக் கவி மலர்கள்,மரணத்துள் வாழ்வோம்,தமிழ் எங்கள் ஆயுதம், சொல்லாத சேதிகள், வேற்றாகி நின்ற வெளி, காலம் எழுதிய வரிகள்,இருபதாம் நூற்றாண்டு ஈழத்துக் கவிதைகள் முதலிய கவிதை நூல்களைக் குறிப்பிடலாம்.
அதேபோன்று சிற்பி தொகுத்த ஈழத்துச் சிறுகதைகள்,தகவம் பரிசுக் கதைகள், பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களின் தொகுப்பான கதைப் ப+ங்கா,விண்ணும் மண்ணும், செ.யோகநாதன் தொகுத்த வெள்ளிப் பாதசரம்,ஒரு கூடை கொழுந்து, செங்கை ஆழியான் தொகுத்த மல்லிகைச் சிறுகதைகள்,மறுமலரச்சி சிறுகதைகள்,ஈழகேசரி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள்,ஈழநாடு சிறுகதைகள் போன்றன,வெளிச்சம் சிறுகதைகள்,வாசல் ஒவ்வொன்றும் முதலிய சிறுகதைத் தொகுப்புக்களையும் குறிப்பிடலாம்.
இந்தியாவிலும்,புலம்பெயர் சூழலிலும் நிறைய வந்துள்ளன.அவற்றை அறிய முடியவில்லை. லண்டனில் இருந்து செல்வராசாவால் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் நூல் தேட்டம் ஈழத்து நூல்கள் தொடர்பான மிக முக்கியமான பதிவாகும்

No comments:

Post a Comment