Thursday, October 28, 2010

கொள்ளை போகும் கடற்செல்வம்



யாழ்ப்பாண மாவட்டம் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு குடாநாடாகும். அதுமட்டுமன்றி அது ஒரு கடனீரேரியாகவும் உள்ளது.மண்டலாயில் இருந்து வல்வெட்டித்துறைக்கு மேற்கே கடலில் கலக்கும் தொண்டமானாறு, கப்புதூ வெளியில் இருந்து நாவற்குழி வரை நீளும் உப்பாறு, ஆனையிறவு என கடனீரேரியின் பரப்பும் பெரியது.மீன்வளம் செறிவாக இருப்பதற்குரிய பல காரணிகள் கொண்டதாக யாழ்.குடாநாடு இருக்கிறது.
ஆழமற்ற கடலாக அது காணப்படுகின்றமை முக்கியமானதாகும். அத்துடன் கடலடித்தள மேடையும் இப்பிரதேசத்தில் உள்ளது ஆழமற்ற கடலில் சூரிய ஒளி அதிகம் படுவதால் கடல் பிளாந்தன்கள் எனப்படும் தாவரங்கள் அதிகளவில் வளர்கின்றன.இவை மீன் உணவாகப் பயன்படுவதுடன் மீன்களின் இனப்பெருக்கத்துக்கும் சிறிய மீன்களின் வாழ்வுக்கும் உதவியளிப்பனவாக உள்ளன.. அத்துடன் ஆழமற்ற கடலாதலால் சூரிய வெப்பம் பட்டு மீன்கள் பெருகி வாழ்வதற்குரிய மிதமான வெப்பநிலையையும் இப்பிரதேசம் கொண்டிருக்கிறது.
இதனால் யாழ். மாவட்டம் மீன்பிடித் தொழிலில் நீண்ட காலமாக முதன்மையான இடத்தையே வகித்தது.இலங்கையின் சிறந்த மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன்துறைக்கு அடுத்த ஊரான மயிலிட்டி விளங்கியது.தென்னிலங்கையிலிருந்து வரும் நூற்றுக் கணக்கான லொறிகளில் இங்கிருந்து கடற்செல்வம் தென்னிலங்கைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.யாழ்ப்பான மீனவர்களின் வாழ்வில் வசந்தம் வீசிய காலமாக அது இருந்தது. இங்குள்ள லொறி உரிமையாளர்கள், தரகர்கள், ஐஸ்கட்டி தயாரிப்பு நிலையங்கள், வலை உற்பத்தியாளர்,விற்பனையாளர் என எண்ணற்றோரின் தொழில்வாய்ப்புக்கும் அக்காலம் இடமளித்தது.குடாநாட்டு மக்களின் மீன்தேவையை நிறைவாக்கும் வகையில் கடற்தொழில் சிறப்புற்றிருந்தது.
அதன் பின் 1990 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற யுத்தம் படிப்படியாக வலிகாமம் வடக்கின் பல கடற்கரைக் கிராமங்களிலிருந்த மக்களை இடம் பெயர்த்தது.பின்னர் அது முழுமையாகவே யாழ்.குடாநாட்டுக் கரையோரங்களிலிருந்தும் இடம்பெயர்த்தியது.அல்லது கடலில் இறங்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.கடல் வலயத் தடைச் சட்டத்தின் மூலம் மீனவர்கள் எவரும் கடலில் இறங்க முடியாமல் செய்யப்பட்டது. மீறித் தமது ஜீவனோபாயத்ததை மேற்கொள்ள விளைந்தவர்கள் சுடப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
இத்தகைய பலஅனர்த்தங்களுக்கும் நடுவே கூட ஓரளவுக்கு குடாநாட்டு மக்களால் மீன்களைப் பெற முடிந்துள்ளது.ஆனால் இப்போது படிப்படியாக கடல் வலயங்கள் அகற்றப்பட்டு மீன்பிடிக்கும் பிரதேசங்கள் அகலிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னமும் அகற்றப்படாதுள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. தொண்டமானாற்றிலிருந்து பலாலி, மயிலிட்டி, காங்கேசன்துறை,கீரிமலை,சேந்தாங்குளம் ஈறாக மாதகல் வரை இவ்வாறு மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நீண்ட கடற்கரைப் பிரதேசம் உள்ளது.இது தவிரவும் மேலும் சிறு சிறு பகுதிகளும் உள்ளன.
வலி.வடக்கிலுள்ள மேற்குறிப்பிட்ட பகுதிகளே அதிகளவில் மீன் பிடிக்கப்படும் பிரதேசமாகும். யாழ்.குடாநாட்டின் சந்தைகளுக்கு மட்டுமல்ல தென்னிலங்கைச் சந்தைகளுக்கும் இங்கிருந்தே அதிகளவு மீன்கள் கொண்டு வரப்பட்டன.
இன்று இங்குள்ள மக்களின்தேவையைப் பூர்த்தி செய்ய இப்போது பிடிக்கப்படும் மீன்கள் போதுமானவையாகவே உள்ளன. ஆனால் யாழ்.குடா நாட்டில் மீன்களுக்குத் தட்டுப்பாடான நிலையும்,விரும்பியவாறு மீன்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையும் காணப்படுகிறது.அத்துடன் கடந்த காலங்களுடன் ஒப்பிடுமிடத்து மீன்களின் விலையும் மிக உயர்வாக உள்ளதாகப் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மீன்கள் அதிகம் சந்தைக்கு வராத, அதிகம் தட்டுப்பாடு நிலவிய காலங்களை விடவும் தற்போது விலை அதிகமாகும் என்கிறார் பாவனையாளர் ஒருவர்.
வடமராட்சியில் மீனைக் கொள்வனவு செய்யும் உள்ளுர் விவசாயி ஒருவர் தம்மால் மீன்களைக் கொள்வனவு செய்ய முடியாதிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.அதிகாலையிலே எழுந்து வடமராட்சிக் கடற்கரைக்குச் சென்ற போதும் தமக்கு நல்ல மீன்கள் கிடைப்பதில்லை என்கிறார் அவர். மீன்பிடிப் படகுகள் வந்ததும் முதலில் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்வதற்காக கூலர் வாகனங்களில் வரும் பெரும் வியாபாரிகளுக்கே விநியோகிக்கப்படுகின்றன. அவர்கள் மிகப் பெரிய மீன் வகைகளையும், அதிக கிராக்கியுள்ள மீன்களையும் எடுத்துச் செல்கிறார்கள். சாதாரணமாக 30 ரூபா விலை போகும் சூடை மீனைக் கூட அவர்கள் நூறு ரூபாவுக்கு வாங்கிச் செல்கிறார்கள். சவளைப் பயன்படுத்தி வள்ளங்களிலிருந்து மீன்கள் வொறிக்குள் ஏற்றப்படுகின்றன. அவர்கள் கொள்வனவு செய்து எஞ்சியவற்றையே உள்ளுர் மீன் வியாபாரிகளால் கொள்வனவு செய்ய முடிகின்றது.
ஆக,குடாநாட்;டில் பிடிக்கப்படும் கடற்செல்வம் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத கதையாக தென்னிலங்கைக்குச் சென்று விட உள்ளுர்வாசிகள் நல்ல மீனைக் கொள்வனவு செய்ய முடியாமல் அங்கலாய்க்கும் நிலையே உள்ளது. உயர்பாதுகாப்பு வலயத்துள் இருக்கும் கடற்பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டு அங்கு மீன்பிடித் தொழில் ஆரம்பிக்கப்படும் போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படலாம்.அல்லாவிடில் எவ்வாறு மலையகத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத் தேயிலையை நுகர முடியாதுள்ளதோ,அது போலவே குடாநாட்டில் பிடிக்கப்படும் நல்ல மீன்களையும் அங்குள்ளவர்களால் நுகர முடியாது போகும் நிலையும் தொடரவே செய்யும்.

No comments:

Post a Comment