Tuesday, June 13, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 8

 



                                      
முன்றில் – 8

இயல்வாணன்

ஒரு மொழிபெயர்ப்பாளராகவும், தேர்ந்த வாசகராகவும்,   விமர்சகராகவும் விளங்கியவர் தேவா என இலக்கிய உலகில் அறியப்பட்ட திருச்செல்வம் தேவதாஸ். இவர் கடந்த 25-03-2023 அன்று தனது 70வது வயதில் காலமாகி விட்டார்.

1952ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18ஆந் திகதி மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவில் பிறந்த தேவா யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்தவர். அதன் பின்னர் பட்டயக் கணக்காளர் படிப்பை மேற்கொண்டிருந்த நிலையில் மகாராஜா நிறுவனத்தில் பணியாற்றினார். அதையடுத்து பிறிமா நிறுவனத்தில் பணியாற்றினார்.  பணி நிமித்தமாக பாகிஸ்தான் பயணமான நிலையில் அங்கிருந்து சிரியா, துருக்கி, பல்கேரியா, ஆஸ்திரியா வழியாக நீண்ட இடர் மிகுந்த தரைவழிப் பயணத்தை மேற்கொண்டு 1983ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் அகதியாகத் தஞ்சமடைந்தார். தனது ஓய்வு காலம் வரை அங்கேயே பணி புரிந்தார்.

டொச், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் மிக்க அவர் அந்த மொழிகளில் வந்த தேர்ந்த படைப்புகளை வாசிக்கும் ஆர்வமும் தேடலும் கொண்டிருந்தார். வாசிப்பு, மாற்று இசை, பயணம் ஆகிய மூன்றுமே அவருக்கு ஈர்ப்பானதும், அதிக நாட்டங் கொண்டதுமான துறைகளாகும். இவை பற்றியே நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எழுதியும் இருக்கிறார்.

 இடதுசாரிய சிந்தனையிலும் தேவா ஈர்ப்புக் கொண்டிருந்தார். இடதுசாரிகளுடன் அவரது தொடர்பு இருந்தது. “செங்காலனில் இடதுசாரிகள் சந்திக்கிற கபேயில் அவரைச் சந்திக்கலாம்“ என்று அவரது நண்பர் ரவி குறிப்பிட்டுள்ளார். எனினும், இடதுசாரிய சிந்தனைகளை அப்படியே மந்திரம் போல ஏற்றுக் கொள்ளாமல் அதன் மீதான விமர்சனங்களையும் தேடி வாசித்து, அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டவராகவும் விளங்கினார்.

1987இல் சுவிஸில் வாசகர் வட்டமாக உருவாக்கப்பட்டு, பின்னர் மனிதம் குழுவாக அடையாளப்படுத்தப்பட்டவர்களுடன் இணைந்து செயற்பட்ட அவர் ஜனநாயகம், மனித உரிமைகள், மாற்றுக் கருத்துகள் சார்ந்து பேசியும், எழுதியும் வந்துள்ளார். டொச் மொழியில் வந்த நூல்களை மட்டுமல்லாது பத்திரிகைகளையும் வாசித்து தனது அறிவை இற்றைப்படுத்திக் கொண்டிருந்த தேவா வாசகர் வட்ட நிகழ்வுகளில் முக்கிய உரையாளராகவும், விமர்சகராகவும் விளங்கினார்.

அவர்களால் வெளியிடப்பட்ட மனிதம் இதழ்கள் பலவற்றில் டொச் மொழியில் இருந்து தேர்ந்த கட்டுரைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவற்றில் பொப் மார்லியும் றேகே இசையும், நிக்கரகுவா – புரட்சியின் பின், ஜபபான் – சூரிய சாம்ராஜ்யம், சூறாவளியின் கண்களில் 120 மில்லியன் குழந்தைகள், உளவியல் பார்வையில் நாசிசம் முதலான கட்டுரைகள் அதிகம் பேசப்பட்டன.

ஜோன் ஜெனேயின் The Maid நாடகத்தை பணிப்பெண் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இது கருப்பு தொகுப்பில்(2002) இடம்பெற்றது.

அவர் டொச் மொழியில் இருந்து மொழிபெயர்த்த முதல் நூல் குழந்தைப் போராளி(2007). தனது ஒன்பதாவது வயதில் உகண்டாவின் புரட்சிப் படையான தேசிய எதிர்ப்புரட்சி இராணுவத்தில் (என் ஆர் ஏ) இணைந்த சைனா கெயிற்றற்சியின் அனுபவங்களை தமிழுக்கு கொண்டு வர விரும்பி அதனை மொழிபெயர்த்தார். அவர் தமிழில் மொழி பெயர்த்த பின்னரே பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் அந்நூல் வெளிவந்தது. எனினும் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் பிறகே வெளிவந்தது.உகண்டாவின் இனக் குழுக்களுக்கிடையிலான மோதல்களில் குடும்ப உறவுகள் இறந்து போதல், பலதார மணப் பிரச்சினைகள், வறுமை, குடும்ப வன்முறை, ஆயுதக் குழுக்களின் வீராவேசப் பேச்சுகள் எனப் பல காரணங்களால் பதின்ம வயதுக் குழந்தைகள் போராளிகளாகிய வாழ்க்கை அனுபவங்களை கெயிற்றச்சியின் குழந்தைப் போராளி பேசுகிறது. கருப்புப் பிரதிகள் வெளியிட்ட இந்நூல் இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது.

அவரது அடுத்த நூல் அனொனிமா- முகம் மறைத்தவள்(2010). இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு பெண்ணின் கதை. யுத்தத்தின் கொடூர முகத்தை வெளிக்காட்டும் கதையாக அது அமைந்திருந்தது. “அவள் யுத்தத்தின் பார்வையாளராகவோ, பங்கெடுப்பாளராகவோ இருந்திருக்கவில்லை. யுத்தம் அவள் மீதேதான் நடந்து முடிந்திருக்கிறது“ என்பதே இந்நாவலின் சாரமாகும். புபாளம் புத்தகப் பண்ணை வெளியிட்ட இந்நூலும் இரண்டு பதிப்புகள் கண்டது.

அதன் பின்னர் இலங்கை எழுத்தாளரான உசுல பி.விஜயசூரிய எழுதிய அம்பரய(2016) இளைஞர் நாவலை ஆங்கிலம் வழியே தமிழுக்கு கொண்டு வந்தார். சிங்கள கிராமப்புற வாழ்வியலை ஒரு இளைஞனின் பாத்திரத்துக்கூடாக அழகாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் இந்த மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது.

அவரது மொழிபெயர்ப்பில் வந்த இன்னொரு நூல் என் பெயர் விக்டோரியா(2018). தொந்தா விக்டோரியா எழுதிய சுயகதை. ஆஜென்ரீனாவில் 1976இல் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்கள் ஒருபுறம். கர்ப்பிணிகளாக்கப்பட்டவர்கள் மறுபுறம். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் சர்வாதி காரத்துக்குத் துணை போனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதைதான் இந்நூல்.

1994ஆம் ஆண்டு சாகரவர்த்தனா கப்பலில் பணியாற்றிய போது விடுதலைப் புலிகளால் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களின் காவலில் இருந்து நீண்ட காலத்தின் பின்னர் விடுதலையான கொமடோர் அஜித் போயகொட தனது அனுபவங்களைச் சொல்லச் சொல்ல சுனிலா கலப்பதி அதனை எழுதி Long Watch நூலாக வெளிவந்தது. இதனை தேவா நீண்ட காத்திருப்பு(2020) என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். சிறை அனுபவங்களையும், சிறை மீண்ட பின்னர் அரசாங்கம் நடந்து கொண்ட முறையையும் அவர் இந்த நூலிலே தந்துள்ளார். அம்பரய, என்பெயர் விக்டோரியா, நீண்ட காத்திருப்பு ஆகிய நூல்கள் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளன.

இந்த ஐந்து நூல்களிலும் தேவாவின் துல்லியமான, வாசகரிடத்தில் ஒத்துணர்வைத் தொற்ற வைக்கும் மொழிபெயர்ப்பைத் தரிசிக்கலாம். அந்தந்தச் சூழலை  உணரச் செய்து, பாத்திரங்களை எமக்கு நெருக்கமாக்கத்தக்க எளிமையான நடை அந்த நூல்களுடன் எம்மை ஒன்றச் செய்து விடுகின்றது. இதுவே ஏனைய மொழிபெயர்ப்பாளரிடமிருந்து தேவாவை வேறுபடுத்துவதாகும்.

எட்வர்டோ கலியானோ எழுதிய “லத்தீன் அமெரிக்காவின் பிளவுண்ட இரத்த நாளங்கள்“, காலித் ஹுசைனி எழுதிய  “ஓராயிரம் ஒளிரும் சூரியன்“ ஆகிய நூல்களையும் அவர் மொழிபெயர்த்திருந்தார். எனினும் அவை இன்னமும் நூல்களாக வெளிவரவில்லை.

தேவா பணி ஓய்வின் பின்னர் இலங்கை திரும்பி மனைவியுடன் தலைமன்னாரில் வசித்து வந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்து மரணத்தைத் தழுவினார்.

ஒரு இலக்கியச் செயற்பாட்டாளராக, விமர்சகராக, தமிழ்ச் சூழலுக்கு நெருக்கமான படைப்புகளை மொழிபெயர்த்தவராக, பழக இனியவராக, நல்ல மனிதப் பண்புகள் கொண்டவராக எம்மிடையே வாழ்ந்தவர் தேவா. அவரது படைப்புகளை வாசிக்குந் தோறும் தேவாவை நாம் தரிசிக்கலாம்.

14-05-2023 உதயன் சஞ்சீவி

 

 

 

 

No comments:

Post a Comment