Tuesday, June 13, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 9

 

முன்றில் – 9

இயல்வாணன்

“வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் – கடல்

வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்

தள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் – மீன்

அள்ளிவர நீண்டநேரம் ஆகும்“

ஒரு காலத்தில் இந்தப் பாடலை முணுமுணுக்காத வாய்கள் இல்லையெனலாம். புதுவை இரத்தினதுரையின் உணர்வுறும் வரிகளுக்கு  வள்ளத்தில் அமர்ந்து அலைகளில் தவழ்ந்து பயணம் போவது போன்ற அனுபவத்தைத் தரக்கூடியதாக இந்தப் பாடலை இசையமைத்தவர்  கண்ணன் என அழைக்கப்பட்ட கோபாலகிருஸ்ணன்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பிரதேசத்தில் 23-03-1943இல் பிறந்த அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்து பதினொராந் தரத்தை நிறைவு செய்த பின்னர் இசைத்துறைக்குள் நுழைந்து கொண்டார். இவரது தந்தையார் முத்துக்குமாரு ஒரு தபேலா வாத்தியக் கலைஞராகவும், ஹார்மோனியம் வாசிப்பவராகவும் விளங்கினார். அதனால் அவரே இசைத்துறையில் இவரை வளர்த்து விட்டார்.

ஆரம்ப இசைப்பயிற்சியை புலவர் சண்முகரத்தினத்திடம் பெற்றுக் கொண்டார். பின்னர் சிதம்பரம் கிருஸ்ணமூர்த்தி, வேலணை சங்கீதபுஷணம் இராஜலிங்கம், நாதஸ்வர வித்துவான் கோவிந்தபிள்ளை  ஆகியோரிடம் முறையான இசைப்பயிற்சியையும் பெற்றுக் கொண்டார்.

16 வயதில் மேடையேறிய அவர் ஆரம்பத்தில் கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்களில் இசைக்கச்சேரிகளில் வாத்தியக் கலைஞராகப் பங்குபற்றினார். 1960ஆம் ஆண்டில் ஒரு இசைக்குழுவை உருவாக்கினார். அந்த நேரத்தில் சில காலம் தென்னிந்தியக் கலைஞர்களுக்குத் தடை வித்திக்கப்பட்டிருந்தது. எனவே, உள்ளுர்க் கலைஞர்கள் பிரபலம் பெற்றனர். இந்த இசைக்குழுவும் மெல்ல மெல்லப் பிரபலமாகவே பெயர் சூட்டப்படாமலே மக்களால் “கண்ணன் கோஷ்டி“ என அழைக்கப்பட்டது. வண்ணை கலைவாணர் நாடக மன்றத்தினால் மேடையேற்றப்பட்ட நாடகங்களுக்கும் இசையமைத்தார்.

60களில் யாழ்ப்பாணம் முற்றவெளியில்  நடந்த தினகரன் விழாவின் ஒரு பகுதியாக வர்த்தக ஊர்தி பவனி இடம்பெற்றது. அதில் கண்ணன் இசைக்குழுவும் பவனியாக ஊர்தியில் இசைநிகழ்ச்சியை நடத்தியது. இதற்கு முதற்பரிசு கிடைத்தது. இது குழுவை உற்சாகப்படுத்தியது. சில பாடல்களை இசையமைத்து மேடைகளில் பாடினர். 

தினகரன் விழாவில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய  இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் நடராஜா வானொலிக்காக மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றினைத் தயாரித்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். அதையேற்று கொழும்பு சென்று நிகழ்ச்சிக்கான பாடல்களுக்கு இசையமைத்தார். மாதாமாதம் ரயிலில் பயணித்து, ஒரு வாரம் தங்கி நின்று இசையமைத்து ஒலிப்பதிவு செய்த பின்னர் யாழ்ப்பாணம் திரும்புவதாக அவரது ஆரம்ப காலம் இருந்தது. பின்னர் கொழும்பிலேயே தங்கி நின்று இசையமைத்தார்.

அந்தக் காலத்தில் நேசம் என்பவருடன் இணைந்து கண்ணன்-நேசம் இசைக்குழுவை உருவாக்கி கொழும்பில் இசைநிகழ்ச்சிகளையும் நடத்தினார். மெல்லிசை, பொப்பிசை, றொக்கிசை, திரையிசை, பக்திப் பாடல்கள் என எல்லாமே கண்ணன்-நேசம் இசைக்குழுவால் மேடைகளில் இசைக்கப்பட்டது. இதற்கென இவர்களால் உருவாக்கப்பட்ட  பாடல்களும் இசையமைக்கப்பட்டன.

அந்த வேளையில்தான் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தெய்வம் தந்த வீடு, கோமாளிகள், ஏமாளிகள் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். தெய்வம் தந்த வீடு படத்தில் தவில் வித்துவானாகவும் நடித்தார். கோமாளிகள் படத்தில் வந்த “சம்மதமா சொல்லித் தரவா என் உள்ளம் உன்னோடுதான்“ என்ற சில்லையுர் செல்வராசன் – கமலினி நடித்த, முத்தழகுவும் கலாவதியும் பாடிய பாடல் அக்காலத்தில் இலங்கை முழுவதும் பிரபலம் பெற்றிருந்தது. நீலாவணன் எழுதிய “ஓ..வண்டிக்காரா“ பாடலும் இவரால் இசையமைத்துப் பிரபலமான இன்னொரு பாடலாகும்.

1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வந்த அவர் நாடகங்களுக்கு இசையமைத்தார். குழந்தை ம.சண்முகலிங்கம், சிதம்பரநாதன் ஆகியோரின் அனேக நாடகங்களுக்கு இவரே இசையமைத்தார். அத்துடன் தாசீஸியஸ், பாலேந்திரா, மௌனகுரு போன்றோரின் நாடகங்களுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும் மாணவர்களின் இறுதியாண்டுப் பரீட்சையின் ஒரு பகுதியாக ஆற்றுகை செய்யப்படும் நாடகங்களுக்கும் இசையமைத்தார்.

1990ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து கண்ணனின் பயணம் விடுதலைப் பாடல்களுடன் ஆரம்பித்தது. அப்போது தமிழீழ இசைச் சாம்ராஜ்யத்தின் கொடுமுடியாக அவர் பார்க்கப்பட்டார். பலநுறு பாடல்கள் அக்காலத்தில் இவரது தனித்துவமான இசையில் வெளிவந்தன. நெய்தல், கரும்புலிகள் ஆகிய இசைநாடாக்களின் பாடல்கள் அக்காலத்தில் பெரும் உணர்வெழுச்சியோடு பாடப்பட்டன. புதுவை இரத்தினதுரை – கண்ணன் கூட்டணியில் மலர்ந்த பாடல்கள் சாசுவதமானவையாக இன்றும் நிலைத்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆந் திகதி பாடப்படும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே“ என்ற துயிலெழுச்சிப் பாடல் ஒவ்வொருவரையும் உறையச் செய்யும் உயிர்ப்பான இசைக்கோர்வையாலானதாகும். அது கண்ணனின் இசையில் மலர்ந்தது. இதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் இசைவாணர் பட்டமும், தங்கப் பதக்கமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். கலாபுஷணம் முதலான பல பட்டங்களை அவர் பெற்றுக் கொண்ட போதும்  இசைவாணர் கண்ணன் என்பதே நிலைத்து விட்ட பட்டமாகும்.

சமாதான காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்து கிளிநொச்சியில் திரைப்படப் பயிற்சியை வழங்கிய உதிரிப்புக்கள் மகேந்திரனின் வழிகாட்டலில் ஆதவன் திரைப்படப் பயிற்சிக் கல்லுரியால் உரவாக்கப்பட்ட 1996 என்ற குறும்படத்துக்கும் இவரே இசையமைத்துள்ளார்.

அண்மையில் 80 அகவைகளை நிறைவு செய்து அமுதவிழாக் கண்ட இசைவாணர் கண்ணன் தற்போது இளையோருக்கான இசைப்பயிற்சியினை வழங்கி வருகின்றார்.  அவரது பிள்ளைகளான சத்தியன், சாயிதர்சன் ஆகியோர் இசையமைப்பாளர்களாக மிளிர்ந்து வருவதுடன் பேத்தி பவதாயிணி நாகராஜா தமிழ்நாட்டின் ஸீதமிழ் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்ச்சியில் பாடி அசத்திப் பிரபல்யம் பெற்றுள்ளார். இசைவாணரின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவை சுவைஞர் உதடுகளில் என்றும் நர்த்தனமாடும்.

21-05-2023 உதயன் சஞ்சீவி



No comments:

Post a Comment