Wednesday, January 8, 2025

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி

 





யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி


இயல்வாணன் (எஸ்.எஸ்.குமரன்)


வருடாந்தம் தேசிய வாசிப்பு மாதத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தி வாசிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனில் வாசிப்பு தொடர்பில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. வாசிப்பின் மீதான ஆர்வம் குறைந்தமையே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இலத்திரனியல் சாதனங்களின் பெருக்கத்தால், தொலைக்காட்சிகளுக்குள்ளும், கைத்தொலைபேசிகளுக்குள்ளும் மூழ்கும் மனநிலைக்குள் சமூகம் வந்துவிட்டமையே இதற்குக் காரணம் என்று குற்றஞ் சாட்டப்படுகிறது. அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.


பதிப்பிக்கப்படும் நூல்கள் மின்நூல்களாக, பிடிஎப் வடிவ நூல்களாக புத்தகங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. பலர் அவற்றை வாங்கிப் படிக்கின்றனர். பல்வேறு எண்ணிம நூலகங்களில் இருந்து நூல்களை இலவசமாகப் பெற்றுப் படிக்கும் வாய்ப்புகளும் பெருகியுள்ளன. ஆயினும் புதிய புத்தகத்தைக் கையிலெடுத்து  அதன் வாசத்தை நுகர்ந்து அனுபவித்துப் படிக்கும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. அனுபவித்து வாசிக்கவும், அடிக்கோடிடவும், குறிப்புகளை எழுதி நினைவுபடுத்தவும் புத்தகங்கள் உதவுகின்றன.


இத்தகைய புத்தகங்களை வாங்குவதற்கு கடைகளை நோக்கிச் செல்வோர் அரிது. புத்தகக் கண்காட்சிகள் மூலம் வாசகர்களை அதிகளவில் ஈர்க்கவும்இ வாசிப்பின்பால் அவர்களை ஈடுபடுத்தவும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் வாசிப்பை ஊக்குவிக்க குலசிங்கம் வசீகரன் அதிகம் பங்களித்து வருகின்றார். ‘எங்கட புத்தகங்கள்’ என்ற கருத்துருவாக்கத்தின் மூலம் எமது பிரதேசத்தில் வெளியிடப்படும் நூல்களை அறிமுகம் செய்தும், விற்பனை செய்தும், நூல்களை வெளியிட்டும், பல்வேறு பிரதேசங்களிலும் நூற்கண்காட்சிகளை நடத்தியும், ‘எங்கட புத்தகங்கள்’ என்ற சஞ்சிகையை வெளியிட்டும் அவராற்றும் பணி முக்கியமானது.


கண்காட்சிகள் மூலம் வாசக ஈர்ப்பை ஏற்படுத்தி, தேர்ந்த நூல்களின்பால் வாசகர்களை ஆற்றுப்படுத்த முடியும். 2002ஆம் ஆண்டு கலைபண்பாட்டுக் கழகத்தால் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்ட மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வின் ஒரு பகுதியாக நூற்கண்காட்சி இடம்பெற்றது. பின்னர் 1995 இடப்பெயர்வை அடுத்து மீளத் திரும்பிய பின்னர் ஆங்காங்கே சிறிய அளவில் நூற்கண்காட்சிகளை தேசிய கலை இலக்கிய பேரவை நடத்தியது. 2008ஆம் ஆண்டு புக்லாப் நிறுவனம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத்துறையினருடன் இணைந்து 11 நாள்கள் நூல்வேனில் என்ற பெயரில் நூற் கண்காட்சியொன்றினை நடத்தியது. புக்லாப் நிறுவனம் தமிழகத்திலிருந்து இலக்கியத் தரம்மிக்க தேர்ந்த நூல்களை எடுத்து வந்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முக்கிய புத்தகசாலை என்பது குறிப்பிடத்தக்கது.


கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வருடந் தோறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இரு தடவை இக்கண்காட்சியினைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அதுபோல தைமாதத்தில் தமிழ்நாட்டின் பெருந்திருவிழாவாக தொடர்ச்சியாக சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.


யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்ட போது குலசிங்கம் வசீகரன் ஒரு காட்சியறையை எடுத்து ‘எங்கட புத்தகங்கள்’ நிறுவனம் மூலமாக புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார். தொடர்ச்சியாக இதனை அவர் மேற்கொண்டு வந்தார். அத்துடன்  சுன்னாகம், நல்லூர், யாழ்ப்பாணம், பரந்தன், பருத்தித்துறை நூலகங்களில் புத்தகக் கண்காட்சிகளையும் செய்து வந்தார்.


அதேபோல தேசிய கலை இலக்கியப் பேரவையால் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவிலும் புத்தக அரங்க விழாக்கள் நடத்தப்பட்டன. மூன்று தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் புத்தகக் கண்காட்சி, நூல்வெளியீடு, புத்தக அறிமுகம், நாடகங்கள் என்பன நடைபெற்றன.


2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27ஆந் திகதி முதல் செப்ரெம்பர் முதலாந் திகதி வரை வட மாகாண ஆளுநர் செயலகத்தின் எண்ணக்கருவில் இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா’ என்னும் பெயரில் வீரசிங்கம் மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது. இலங்கையின் பல புத்தகசாலைகளும், வெளியீட்டு நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்குபற்றின. ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இவ்வாண்டின் (2024) கடந்த மே மாதத்தில் இது போன்ற கண்காட்சியினை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பின்னர் தடைப்பட்டுப் போனது. இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கமே கடந்த பல ஆண்டுகளாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்டமாக புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இதுவரை காலமும் கொழும்பில் நடைபெற்றது போல பெரியளவில் ஒரு சர்வதேச புத்தகக் கண்காட்சி முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு (2024) நடைபெற்றது.இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆந் திகதி முதல் 11ஆந் திகதி வரை யாழ்ப்பாணம் கலாசார நிலைய வளாகத்தில் இக்கண்காட்சி நடைபெற்றது. அனைத்துத் தரப்பினருக்குமான புத்தகங்களையும் கொண்டதாக,  பல்வேறு புத்தக நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து பெரியளவில் ஒரு புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது அதிலும் சர்வதேச புத்தகக் கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டமை இதுவே முதன்முறையாகும். கடந்த 14 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்ற யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமே இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.


யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கலாநிதி வாசுதேவன் இராசையா தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநராக அப்போதிருந்த திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக நுண்இ சிறியஇநடுத்தர முயற்சியாளர்கள் இலங்கை மன்றத்தின் (Ceylon Federation of MSMEs) ) தலைவர் சசிகா டீ சில்வா மற்றும் இருமொழி எழுத்தாளர் ஐ.சாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டில் எங்கட புத்தகங்கள் வசீகரனின் பங்களிப்பும் ஒருங்கிணைப்பும் முக்கியமானதாகும்.


இக்கண்காட்சியில் யாழ்ப்பாணத்தின் முக்கிய புத்தக நிறுவனங்களான பூபாலசிங்கம் புத்தகசாலை, குயின்சி புத்தகசாலை, பனுவல், புக்லாப், வெண்பா, இனிய தென்றல், அன்னை, எங்கட புத்தகங்கள், தாய்நிலம் பதிப்பகம் முதலியனவும், கொழும்பின் கொடகே, சமுத்ரா, குமரன்  முதலியனவும் பங்குபற்றின. வீரகேசரி, நூலகம் பவுண்டேசன் எனப் பல நிறுவனங்களும் இதில் இணைந்து கொண்டன. நிகழ்வில் நாடகங்களும், பட்டிமன்றங்களும், நூல்வெளியீடுகளும், பாடல் வெளியீடுகளும் இடம்பெற்றன.


எதிர்பார்த்ததுக்கு மாறாக இக்கண்காட்சியைப் பெருமளவானோர் வந்து பார்வையிட்டதுடன் நூல்களையும் வாங்கிச் சென்றனர். இளைஞர்கள் தேர்ந்த நூல்களை ஆர்வத்துடன் கேட்டு வாங்கிச் சென்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் வாசிப்பு தொடர்பான பொதுவான எண்ணத்தையும் தகர்த்ததாக இக்கண்காட்சியில் இணைந்து செயற்பட்ட சத்தியதேவன் தெரிவித்தார்.

வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும் எழுத்தாளர்களை ஊக்குவித்து தரமான இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை முக்கியமானது. நல்லூர் திருவிழாவையொட்டிய காலத்தில் ஜுலை- ஓகஸ்ட் மாதங்களில் புலம்பெயர் மக்கள் யாழ்ப்பாணத்தில் அதிகளவில் ஒன்று கூடுவார்கள். இக்காலத்தைத் தேர்ந்து கண்காட்சியை நடத்தினால் புத்தக விற்பனை அதிகரிப்பதோடு புத்தகசாலைகளும் ஆர்வத்தோடு  பங்குபற்றும் வாய்ப்பும் ஏற்படும். அத்துடன் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறுவது போல நூல்வெளியீடுகள் நடத்தப்படுவதுடன் எழுத்தாளர் கௌரவிப்புகளும் காத்திரமான பங்களிப்புகளுக்கான விருது வழங்கலும் இடம்பெறின் கண்காட்சி மேலும் பெறுமதிமிக்கதாக அமையும்.







யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சி காலத்துக்கு அவசியமான சாலச் சிறந்த பணியாகும். படிப்பார்வைத்தைத் தூண்டுவதற்கும்இ தரமான இலக்கிய வெளியீட்டுக்கும் பயன் செய்வதாக இது அமைந்துள்ளது. இதுவரை காலமும் சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் எமது மண்ணில் இதுபோன்ற கண்காட்சி இடம்பெறாதா என ஏங்கிய காலங்கள் அநேகம். இனிவரும் காலங்களில் வருடந் தோறும் இக்கண்காட்சி நடைபெறவுள்ளமை முக்கியமானதொரு விடயமாகும். அடுத்தாண்டு இன்னும் பிரமாண்டமாக இன்னும் அதிகமான பதிப்பகங்களையும் இணைத்து இக்கண்காட்சி இடம்பெறும் என நம்பலாம்.


கலைமுகம் ஜுலை-டிசெம்பர் 2024

No comments:

Post a Comment