சாந்தனின் மணிப்பூர் நினைவுகள்
இயல்வாணன்
சாந்தன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வரும் ஈழத்தின் முக்கிய படைப்பாளியாவார். இவரது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. தமிழில் 27 நூல்கள் வெளிவந்துள்ளன. வங்கமொழியிலும், சிங்களத்திலும் இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் ஒவ்வாரு நூல்களாக வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் 9 நூல்கள் வெளிவந்துள்ளன.
சாந்தனின் எழுத்துகளின் சிறப்பு எளிமையான குறுகத் தறித்த மொழிநடைதான். சொல்லவேண்டிய விடயத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும், அழகியல் வெளிப்பாட்டோடும் சொல்லும் திறன் அவரிடமிருக்கிறது. அதுவே அவரது எழுத்துகளை ஏனையோரிலிருந்து வேறுபடுத்துவதாகும்.
பயண இலக்கியங்கள் பல்வேறு மொழிகளிலும் வந்துள்ளன. பயண இலக்கியங்கள் வெறுமனே இடங்கள் குறித்த பதிவுகளல்ல. குறித்த இடங்களின் இயற்கையழகு, புவியியல் சார்ந்த விடயங்கள், பண்பாட்டு அம்சங்கள், வரலாற்றுக் குறிப்புகள், உயிர்ப்பல்வகைமை குறித்த அவதானங்கள், மனித வாழ்க்கை முறை மற்றும் நடத்தைகள் முதலான இன்னோரன்ன விடயங்கள் பயண இலக்கியங்களுக்குள் செறிந்துள்ளன. சொல்லுகின்ற முறைமையாலும், கூர்ந்த அவதானிப்பினாலும், அவற்றைக் கவனப்படுத்தி வெளியிடுவதாலும் பயண இலக்கியங்கள் பேசப்படுவனவாக உள்ளன. கி.வா.ஜகந்நாதனின் இலங்கைப் பயணக் கட்டுரைகள் இன்றும் பேசப்படுகின்றன. மணியனின் பயணக் கட்டுரைகள் சுவாரஸ்யமாக வாசிக்கப்பட்டன.
சாந்தன் ஏற்கனவே ஒளிசிறந்த நாட்டினிலே என்ற பயணநூலை வெளியிட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் என 15 குடியரசுகளாகப் பிரிய முன்னர் இவையெல்லாம் சோவியத் ஒன்றியம் என்ற பெயரிலேயே இருந்தன. 1990களிலேயே அது உடைந்து சிதறியது. சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான நாடுகள் இணைந்து இரண்டாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்டன. அந்த சோவியத் ஒன்றியத்துக்குப் பயணப்பட்டு அங்கு கண்டனுபவித்தவற்றை ஒளிசிறந்த நாட்டினிலே என கட்டுரையாக ஈழமுரசில் எழுதினார். அது ஈழமுரசு வெளியீடாக 1985இல் நூலாக வெளிவந்தது.
அதுபோல கென்ய நாட்டுக்குப் பயணப்பட்ட அனுபவங்களை காட்டுவெளியிடை(2007) என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் இலக்கிய ரீதியாக பயணப்பட்ட அனுபவங்களை எழுத்தின் மொழி(2020) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
இப்போது மணிப்பூர் நினைவுகள்(2024) என்ற நூலினை வெளியிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்குட்பட்டு, சமையல் எரிவாயுவுக்கும், எரிபொருளுக்கும் தட்டுப்பாடும் வரிசைகளும் நிலவிய நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள், ஏனைய பொருட்கள் உச்சவிலையில் விற்ற காலத்தில் பணவீக்க நிலைமையுடன் இலங்கை பயணப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் மணிப்பூர் இலக்கிய விழாவில் பங்குபற்றுமாறு இவருக்கு அழைப்பு வருகின்றது. அந்த நிலையிலும் இலக்கிய விழாவில் பங்குகொள்ள சாந்தன் ஆர்வம் கொண்டு 15 மடங்கு கட்டணம் செலுத்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சென்று, அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணிக்கிறார். அந்தப் பயண அனுபவங்களையே இந்த நூலில் அவர் தந்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், திரிபுரா, நாகலாந்து ஆகிய ஏழு மாநிலங்களும் ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. எட்டாவதாக உள்ள சிக்கிம் சற்றுத் தள்ளியிருப்பதால் சகோதரன் என அழைக்கப்படுகின்றது என்ற இட அமைவுத் தகவலை இந்நூல் ஆரம்பத்தில் தருகிறது. இந்த மாநிலங்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் பங்களாதே~; இருப்பதால் இவற்றுக்கிடையே பயணப்பட 1500 கிலோமீற்றர் தூரமும் 35 மணிநேரமும் தேவைப்படுவதாக ஒரு தகவலையும் தந்துள்ளார்.
இவ்வாறே அந்த ஊரின் இயற்கை வனப்பினையும், போக்குவரத்து மார்க்கங்களையும், கலாசார அம்சங்களையும் அவ்வப்போது சொல்லிச் செல்கிறார். ஒரு பயணி பயணிக்கும் போது சந்திக்கும் மனிதர்களையும், இடங்களையும், கண்ட காட்சிகளையும், மேற்கொண்ட உரையாடல்களையும் விவரணப் பாங்கில் சொல்லுகின்ற போது அது இலக்கியமாகிறது. ஒரு குறுநாவலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த மணிப்பூர் இலக்கிய விழாவுக்கு சங்காய் திருவிழா என்றே பெயரிடப்பட்டிருந்தது. சங்காய் என்பது இப்பிரதேசத்திற்கே உரித்தான அழிந்து வரும் உயிரினமான சங்காய் மானின் பெயராகும். மணிப்பூரின் தனித்துவத்தையும், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பையும் கருதி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த இலக்கிய விழாவை ஏற்பாடு செய்தவர்கள் முன்னரங்குக்கு வராமல் பின்னிருந்தே நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியிருந்தமை பற்றியும் இந்நூல் பேசுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காங்லா கோட்டை, ராஜ்குமார் சந்திரஜித்சனா சிங் என்ற ஓவியரின் கலை அருங்காட்சியகம், மணிப்பூரின் பாரம்பரிய உணவகம், பாக்யசந்ரா அரங்கு, லோக்டாக் ஏரியின் மந்தா தீவருகே அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைய என்று ஒவ்வொரு இடங்களையும், அதன் வரலாற்றினையும், அது தொடர்பான இலக்கியங்களையும் இந்நூலில் சாந்தன் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார். அங்கு சந்தித்த மனிதர்களையும், அவர்களது பெருமைகளையும், அன்பையும் பற்றியும் இந்நூலில் பேசியுள்ளார்.
நாமறியாத பல தகவல்களை சுருக்கமாக விபரிக்கும் வகையில் இந்நூலை அவர் ஆக்கியுள்ளார். பன்மொழி இலக்கியகர்த்தாக்களின் கூடலும், அனுபவப் பகிர்வும், படைப்புப் பகிர்வும் கூட இந்நூலின் முக்கியத்துவத்தை மேன்மைப்படுத்துகிறது.
கலைமுகம் ஜுன்-டிசெம்பர் 2024
No comments:
Post a Comment