Friday, June 13, 2025

சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய சிற்பி செனட்டர் நாகலிங்கம்

 

சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய சிற்பி செனட்டர் நாகலிங்கம் 

சு.ஸ்ரீகுமரன்

(சுன்னாகம் பட்டின சபையின் தலைவராக இருந்து சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய பெருந்தகையான அமரர் செனட்டர் நாகலிங்கத்தின் அளப்பரிய சேவையினை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் முகமாக சுன்னாகத்தின் அன்பர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு திருவுருவச் சிலையினை நிறுவியுள்ளனர். அச்சிலையின் திறப்புவிழா இன்று 07-0-2025 சனிக்கிழமை வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)

 வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் திருவுருவச்சிலைக்கு அருகாக சுன்னாகம் பட்டினசபைத் தலைவராக இருந்து நகர நிர்மாணத்துக்கு முக்கிய பங்காற்றிய செனட்டர் பொன்னம்பலம் நாகலிங்கத்தின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வேளையில் செனட்டர் நாகலிங்கத்தின் பணிகளை நினைவுகூர்வது காலப் பொருத்தமாகும்.

14-01-1903அன்று தெல்லிப்பழையில் பிறந்த நாகலிங்கம் புகழ்பூத்த யாழ்ப்பாணக் கல்லூரியிலும், திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியிலும் கல்வியைக் கற்றார். தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்து சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் தோற்றி சிறப்பான வாதம் புரிந்து புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கினார். 

1924ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸில் ஸ்தாபக உறுப்பினராக இணைந்து கொண்டதுடன் இணைச் செயலாளராகவும் செயற்பட்டார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டங்களிலும், சமூகநீதிப் போராட்டங்களிலும் பங்குபற்றினார். தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சமபந்தி போசனம், ஆலயப் பிரவேசம் போன்ற செயற்பாடுகளில் செயலூக்கத்துடன் பணியாற்றினார்.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் செயற்பாடுகள் செயலிழந்து போனதையடுத்து சமசமாஜக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு இடதுசாரியாகச் செயற்பட்டார். ஒரு தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்த இவர் சிறந்த தொடர்பாடற் திறனைக் கொண்டிருந்தார். இடதுசாரி அரசியல் தலைவர்களாக விளங்கிய கொல்வின் ஆர்.டீ.சில்வா, லெஸ்லி குணவர்த்தன, என்.எம்.பெரேரா போன்றோருடன் நெருக்கமான உறவைப் பேணினார். இலங்கை தொழிலாளர் சங்கம், இலங்கை சுருட்டுத் தொழிலாளர் சங்கம், வடபிராந்திய பஸ் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவராக இருந்து தொழிலாளர் நலன்பேணும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.

தொழிலாளர் பிரதிநிதியாக லங்கா சமசமாஜக் கட்சி சார்பாக செனற் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் 1951 முதல் 1958 வரை செனட்டராக பதவி வகித்தார். செனற் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தொழிற்சங்கவாதி இவரென்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்ற எல்லை மறுசீரமைப்பின் கீழ் உடுவில் கிராமசபையில் இருந்து சுன்னாகம் பட்டினசபை பிரிக்கப்பட்டு 1964ஆம் ஆண்டு ஜனவரி முதலாந் திகதியில் இருந்து செயற்பட்டது. சுன்னாகம் பட்டினசபையின் முதற் தலைவராக செனட்டர் நாகலிங்கம் பொறுப்பினை ஏற்றார். 1976இல் அச்சபை கலைக்கப்படும் வரை அதன் தலைவராகப் பணியாற்றினார். இக்காலத்தில்  அவர் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

 சுன்னாகம் பட்டின சபை அலுவலகம் தனியார் வீட்டில் இயங்கி வந்தது. அதனை நகர மத்தியில் சபைக்குச் சொந்தமான இருமாடிக் கட்டிடத்துக்கு மாற்றியமைத்த பெருமை இவரைச் சாரும். தனது நண்பரான கலாநிதி என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக இருந்த காலத்தில் வரவுசெலவுத் திட்டத்தில் 15 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு கீழே கடைத்தொகுதிகளும் மேலே அலுவலகமும் கொண்ட மாடிக்கட்டிடம் கட்டப்பட்டது. இவ்வாறே அரசியல் தலைவர்களுடனான தனது உறவை சபையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டார். வெளிநாட்டுத் தூதுவரகங்களுடனும் நல்ல தொடர்பினைப் பேணினார். 

சுன்னாகம் சந்தையானது குத்தைகையாளர்களின் பொறுப்பில் இருந்தது. அதனை பட்டினசபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நன்மை பயக்கச் செய்தார். அத்துடன் 30 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்ததுடன் வருமானம் கூடிய சபைகளில் ஒன்றாக சுன்னாகம் பட்டின சபையை மிளிரச் செய்தார்.

தனியார் வீடொன்றில் இயங்கி வந்த சுன்னாகம் பொது நூலகத்தை புதிய கட்டிடம் கட்டி அதில் இயங்கச் செய்ததும் இவரது காலத்தில்தான். மாணவர்களுக்கு அறிவு விருத்தியை ஏற்படுத்தும் நிலையமாக சுன்னாகம் பொது நூலகம் இன்றளவும் நிலைபெற்று நிற்கிறது. அத்துடன் நூலகத்தில் அக்காலத்தில் படிப்பு வட்டம் (Study Circle) ஒன்றும் சிறப்பாகச் செயற்பட்டது. ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம், வைசர் என அழைக்கப்படும் அதிபர் சிவசுப்பிரமணியம், தொழிற்சங்கவாதி இராசசிங்கி முதலானோர் இவ்வட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தனர். பல அறிஞர்களை அழைத்து உரைகளை ஏற்பாடு செய்து அறிவுப் பெருக்கத்துக்கு இவர்கள் வித்திட்டனர்.

இவரது காலத்தில் சுன்னாகம் சந்தியில் இருந்து சுன்னாகம் பொதுநூலகம் வரையான கே.கே.எஸ்.வீதி கொங்கிறீட் வீதியாக மாற்றப்பட்டது. அத்துடன் பல வீதிகளைப் புனரமைப்பதிலும், மின்விளக்குகளைப் பொருத்துவதிலும் இவர் முன்னுரிமையளித்துச் செயற்பட்டார்.

சுன்னாகம் பட்டின சபைக்கு தூய்மைத் தொழிலாளர்களை நியமித்து சுன்னாகம் நகரத்தைத் தூய்மையாகவும் அழகாகவும் பேணியதோடு சோலைவரி சேகரிப்பாளர்களை நியமித்து வரிவருமானத்தை ஈட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

இவ்வாறு தனது அறிவாலும், ஆளுமையாலும் சுன்னாகம் பட்டினத்தை சிறப்பான முறையில் கட்டமைத்த செனட்டர் பொ.நாகலிங்கத்துக்கு அவ்வூர் மக்கள் ஒன்றுசேர்ந்து சிலை அமைப்பது அவரது சேவையினையும், அர்ப்பணிப்பினையும் நன்றியுடன் நினைவுகூரும் சிறப்பான செயற்பாடாகும்.

உதயன் 07-06-2025


No comments:

Post a Comment