Friday, June 13, 2025

நேர்காணல் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே)

 நேர்காணல்

பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே)

நேர்கண்டவர், படங்கள் : இயல்வாணன்

சு.வே. என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை நாவற்குழியில் பிறந்தவர். 1921ஆம் ஆண்டு மே மாதம் 4ஆந் திகதி சுப்பிரமணியம் - தையல்நாயகம் தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் பிரம்மச்சாரியத்தைக் கைக்கொண்டவராக, தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

ஈழத்தில் உருவகக் கதை முன்னோடியாகக் கருதப்படும் இவர் சிறுகதை, கட்டுரை, நாடகத்திலும் முத்திரை பதித்த ஒருவராவார். கல்வித் திணைக்களத்தின் பாடநூல் எழுத்தாளராக இருந்த இவர் துணைப் பாடநூல்களையும், பயிற்சி நூல்களையும் எழுதியவராவார். 84 வயதில் முதுமையும் நோயும் தளர்வடையச் செய்திருந்த நிலையில் அவரை நாவற்குழியில் சந்தித்தேன். பேசுவதற்கும், கடந்த காலச் சம்பவங்களை ஞாபகத்தில் கொள்வதற்கும் சிரமப்பட்ட நிலையிலேயே இந்நேர்காணலைப் பதிவு செய்ய முடிந்தது.

அவரது உறவினரான எஸ்.தங்கராசா உடனிருந்து கூறிய கருத்துகளும், அவர் பற்றிய ஆய்லுக் கட்டுரையும் நேர்காணலைப் பூர்த்தி செய்ய உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி: உங்களது வாழ்க்கை இளந் தலைமுறையினருக்கு ஊக்க மருந்தாக இருக்கும். அது பற்றிக் கூறுங்கள்.

பதில்: இயற்கையழகு மிகுந்த நாவற்குழி எனது ஊராகும். எனது தந்தையார் ஒரு விவசாயி. புராண படனத்திலும், பிரசங்கத்திலும் தேர்ச்சி பெற்றவர். குடும்பத்தில் மூத்த பிள்ளையாக நான் பிறந்தேன். இரண்டு தம்பியரும், இரண்டு தங்கைகளும் எனது உடன்பிறப்புகள்.



இன்றைக்கு நாவற்குழி மகா வித்தியாலயமாக இருக்கின்ற C.M.S பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றேன். இடைநிலைக் கல்வியை கோவிலாக்கண்டி மகாலக்சுமி வித்தியாலயத்தில் தொடர்ந்தேன். எட்டாம் வகுப்பிலிருந்து இன்றைய டிறிபேக் கல்லூரி எனப்படும் சாதனா பாடசாலையில் படித்தேன். அங்கு சிரே~;ட பாடசாலை தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தேன். ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் செல்வதற்கு முன்னுள்ள இரண்டாண்டு இடைவெளியில் கைதடி சி.எம்.எஸ். பாடசாலையில் ஆங்கிலம் கற்றேன். அங்கு தலைமையாசிரியராக இருந்த பரமசாமி என்பவரது தூண்டுதலின் பேரில் திருநெல்வேலி காவிய பாடசாலையில் பாலபண்டித வகுப்பில் சேர்ந்து பரீட்சையில் சித்தியடைந்தேன்.

இக்காலப் பகுதியில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1939இல் சைவாசிரிய கலாசாலையில் பிரவேச பணடிதர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி, தெரிவான 1 பேரில் நானும் ஒருவனானேன். 

அங்கு பண்டிதமணியிடம் தமிழும், மகாமுனிவரெனப் போற்றப்படும் சிந்தனைச் செல்வர் அளவெட் பொ.கைலாசபதியிடம் சமயமும் கற்க வாய்ப்பு ஏற்பட்டது. கைலாசபதி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு மெய்ப்பொருள் அடிப்படையில் புதிய வியாக்கியானம் செய்தவர். அதேபோல பண்டிதமணி அவர்களது இலக்கிய நயப்பு உன்னதமானது.

இவர்கள் இருவரிடமும் கற்கக் கிடைத்தது நான் பெற்ற பெரும் பேறாகும். இலக்கிய ஆக்க முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்துக்கு இவர்களது வழிகாட்டலே துணை நின்றதென நம்புகிறேன்.

1942ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினேன். பயிற்சி முடிந்தாலும் உடனே தொழில் தேட முடியாது. நான்காண்டுகள் வேலை தேடி முயற்சி செய்தேன். இக்காலத்தில் நாவற்குழியில் சைவவித்தியாவிருத்திச் சங்கம் ஒரு பாடசாலையை நிறுவியது. அங்கு வேதனமின்றிச் சிலகாலம் பணியாற்றினேன். 

1946இல் ஹற்றனிலுள்ள டிக்கோயா டங்கெல்ட் உதவி நன்கொடை பெறும் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினேன். 1949இல் ஹற்றன் புனித ஜோன் பொஸ்கொ பாடசாலையில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தேன். சுன்னாகம் திருஞான சம்பந்த வித்தியாசாலை, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் பணியாற்றினேன். இப்போது ஓய்வுநிலையில் உள்ளேன்.

கேள்வி : நீங்கள் ஓர் ஆசிரியராக மட்டுமல்ல பாடநூல் எழுத்தாளராகவும் கடமையாற்றியிருக்கிறீர்கள். அது பற்றிக் கூறுங்கள்.

பதில்  : சுன்னாகத்தில் நான் பணியாற்றிய போது திருமகள் அழுத்தகம், தனலக்சுமி புத்தகசாலை ஆகியவற்றின் தொடர்பு ஏற்பட்டது. அங்கு முகாமையாளராக இருந்த அப்புக்குட்டி மற்றும் பண்டிதர் வ.நடராசா, மு.சபாரத்தினம் ஆகியோரின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. இத்தொடர்பின் விளைவாக 5ஆந் தர மாணவர்களுக்கான உப பாடநூலான ‘சந்திரமதி’, 7ஆந் தர மாணவர்களுக்கான உப பாடநூலான ‘குகன்’ ஆகிய இரு சிறுவர் இலக்கிய நூல்கள் என்னால் எழுதப்பட்டன. எனது முதல் நூலாக்க முயற்சிகளாக இவற்றைக் குறிப்பிடலாம்.

அதன்பின்உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டியாக ‘நாற்பது கட்டுரை மஞ்சரி’ என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதி வெளியிட்டேன். அத்துடன் பண்டிதர் வ.நடராசாவுடன் இணைந்து தமிழ் மொழிப் பயிற்சி நூல்களையும் எழுதினேன்.

1966இல் அப்போதய கல்வி அமைச்சரின் திட்டத்துக்கமைய அரச பாடசாலைகளுக்கான பாடநூல்களை எழுதும் முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்ப் பாடநூல்களை எழுதும் ஒரு குழு பலாலி ஆசிரியர் கலாசபலை அதிபர் கந்தசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் பண்டிதர் க.சச்சிதானந்தன், கவிஞர் அம்பி(இ.அம்பிகைபாகன்), கந்தப்பு ஆகியோருடன் நானும் இடம்பெற்றிருந்தேன்.

காலத்துக்குக் காலம் ஆள்கள் மாறிய நிலையில் இயங்கிய பாடநூலாக்கக் குழுவில் நான் 1981 வரை தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளேன். பல்வேறு அறிஞர்களுடன் குழுவாக இயங்கப்பெற்ற அனுபவம் எனக்குக் கிடைத்திருந்தமை பெருமையும் மனநிறைவும் தரும் விடயங்களாகும்.

கேள்வி : ஆக்க இலக்கியச் சூழலுக்குள் எவ்வாறு உங்களது பிரவேசம் நிகழ்ந்தது?

பதில் : நான் முன்னர் கூறிய அம்சங்களும் இவ்வினாவுக்கான விடையாகும்.  நான் ஹற்றன் புனித பொஸ்கோ பாடசாலையில் கற்பித்த வேளை அங்கு நாடகப் பிரதிகளை எழுதுதல், நெறிப்படுத்தி மேடையேற்றல் ஆகியவற்றில் ஈடுபட்டேன். அப்பாடசாலையின் ஆண்டு மலரில் பாடசாலை வரலாற்றை பொஸ்கோ புராணம் என்ற பெயரில் கவிதை வடிவில் பாடியிருந்தேன். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இருந்தவேளை நாடகப் பிரதிகள் பலவற்றை எழுதியிருந்தேன்.

எனினும் 1943இல் ஈழகேசரியில் எழுதிய ‘கிடைக்காத பலன்’ என்ற சிறுகதையுடனேயே எனது இலக்கியப் பிரவேசம் ஆரம்பமாகியதெனலாம். ஈழகேசரி, இந்துசாதனம் முதலான பத்திரிகைகளைப் படித்த அருட்டுணர்வும், கனக செந்திநாதன், வரதர், நாவற்குழியூர் நடராசன், சு.இராஜநாயகன், த.தியாகராசா முதலான இலக்கிய நண்பர்களின் தொடர்பும் எனது இலக்கியப் பிரவேசத்துக்குத் துணை செய்துள்ளன. ஈழகேசரி, கலைச்செல்வி, வீரகேசரி ஆகியவற்றில் எனது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. ‘மண்வாசனை’ என்ற சிறுகதைத் தொகுதி 1972இல் திருமகள் அழுத்தகத்தால் வெளியிடப்பட்டது. இவற்றுடன் 6 கதைகளை இணைத்து ‘பாற்காவடி’ என்ற தொகுப்பை 2002இல் யாழ்.இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது.

கேள்வி : ஈழத்து நாடகத்துறையில், குறிப்பாக வானொலி நாடக எழுத்தாக்கத்தில் உங்களுடைய பங்குபணி குறித்து விதந்து கூறப்படுகிறது. உங்களது நாடக ஆக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.

பதில் : ஆசிரியராகப் பணியாற்றிய போது பாடசாலையிலும், போட்டிகளிலும் பல நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தி மேடையேறியுள்ளேன். அதுவே வானொலி மற்றும் மேடை நாடகங்களை உருவாக்க வழிகோலியது. இலங்கை கலைக்கழகத்தால் நடத்தப்பெற்ற முழுநீள நாடகப் போட்டியில் வஞ்சி, எழிலரசி ஆகிய எனது நாடகங்கள் முதற்பரிசைப் பெற்றன. அதுபோல இலங்கை வானொலி நாடகப் போட்டியில் ‘மண்வாசனை’ என்ற நாடகம் முதற் பரிசைப் பெற்றது. ‘ஒருமைநெறித் தெய்வம்’ நாடகமும் பரிசு பெற்றுள்ளது.

வானொலியில் பல தொடர் நாடகங்களை எழுதியுள்ளேன். ஏட்டிலிருந்து (16 வாரங்கள்), கிராம ராச்சியம்(32 வாரங்கள்), பொன்னாச்சிக்குளம்(97 அங்கம்) என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றை விடவும் பல நாடகங்களை எழுதியுள்ளேன். இவற்றின் பிரதிகள் கையில் இல்லை. ஞாபகத்திலும் இல்லை. திருக்குறட் சித்திரம் (36 வாரங்கள்), நாட்டுக்கு நல்லது(24 வாரங்கள்), இலக்கிய ரசனை(32 வாரங்கள்) ஆகிய உரைச் சித்திரங்களையும் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் வானொலியை அதிகம் பயன்படுத்திய படைப்பாளிகளில் நானும் ஒருவன்.

கேள்வி : ஈழத்தில் உருவகக் கதையின் பிதாமகனாக உங்களைக் குறிப்பிடுகின்றனர். உருவகக் கதையின்பால் உங்களின் நாட்டம் சென்றது எவ்வாறு?

பதில் : இந்தியாவில் கலீல் ஜிப்ரான் உருவகக் கதையின் முன்னோடியாக விளங்கினார். வி.ஸ.காண்டேகர் உருவகக் கதைகள் புகழ் பெற்றவை. கலைமகள், கல்கி இதழ்களில் வெளிவந்த உருவகக் கதைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். 

எனது மண்ணின் நிலைக்களனில் நேர்பொருளில் கூறமுடியாதவற்றை உருவகப்படுத்திக் கூறுவதற்கு நான் முயன்றேன். இதுவே எனது உருவகக் கதைகளின் தோற்றத்துக்குக் காரணம். 

மணற்கோயில், வெறுங்கோயில், வனமுல்லை, சுதந்திரம், மனக்குருடு உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட உருவகக் கதைகளை எழுதியுள்ளேன். இவற்றை ‘மணற்கோயில’ என்ற தலைப்பில் 1999இல் நூலாக வெளியிட்டுள்ளேன்.

கேள்வி : ராஜாஜி போற்றிய உருவகக் கதையின் பிதாமகர் என எஸ்.பொன்னுத்துரையும், இரசிகமணி கனக செந்திநாதனும் உங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அது பற்றிக் கூறுங்கள்.

பதில் :  எனது ஓர் உருவகக் கதையான ‘மணற்கோயில்’ கலைச்செல்வியில் வெளிவந்தது. அதன் ஆசிரியர் ‘சிற்பி’ சிவசரவணபவன் கலைச்செல்வி இதழ்களை அப்போது இந்தியாவின் கவர்ணர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும் அனுப்பி வந்தார். இக்கதை வந்து சில காலத்தின் பின் எழுத்தாளர் மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக அமரர்கள் க.தி.சம்பந்தனும், சு.இராஜநாயகனும் சென்னைக்குச் சென்றார்கள். அவ்வேளை அவர்களிடம் கல்கி ஆசிரியராக இருந்தவரும் தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத் தலைவருமான மீ.ப.சோமசுந்தரம் ராஜாஜி சு.வேயின் கதை பற்றி தன்னிடம் புகழ்ந்து கூறியதாக குறிப்பிட்டிருந்தார். ராஜாஜி பாராட்டினாரென்றால் அதற்கு சிற்பியே காரணகர்த்தா ஆவார்.

கேள்வி : இலக்கியம் பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : இலக்கியம் என்பது படிப்பவர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி அவர்களது பாவனாசக்தியை மேம்படுத்த வேண்டும்.

கேள்வி : இளந் தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது?

பதில் : நிறைய நூல்களைப் படிக்க வேண்டும். அனுபவங்களை உள்வாங்க வேண்டும்.அதன்பின் தான் வாழும் மண்ணின், இயற்கையின், மனிதர்களின் இயல்புத்தன்மையோடு எளிய நடையில் படைப்புகளை ஆக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும்.

உதயன் சூரியகாந்தி 12-09-2004






















No comments:

Post a Comment