Friday, June 13, 2025

சேவையால் சிறந்தவர் பொன்னுத்துரை கமலநாதன்

 சேவையால் சிறந்தவர் பொன்னுத்துரை கமலநாதன் 

சு.ஸ்ரீகுமரன்


தனது அறிவாற்றலையும் ஆளுமையையும் சமூக மேம்பாட்டுக்காக பயன் படுத்துபவர்கள்  சிலரே. அவ்வாறு தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சமூகச் செயற்பாடுகளுக்காக அர்ப்பணித்த ஒருவராக அமரர் பொன்னுத்துரை கமலநாதன் விளங்குகிறார்.

13-05-1947இல் தாவடி என்ற கிராமத்தில் பிறந்த கமலநாதன் தனது ஆரம்பக் கல்வியை தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூ}ரியில் சேர்ந்து தட்டச்சு சுருக்கெழுத்து துறையில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தட்டெழுத்தாளராக நியமனம் பெற்று கடமையாற்றினார்.

சிறிது காலத்தின் பின்னர் அளுத்கம ஸாஹிரா கல்லூரியில் ஆசிரிய பணியினை ஏற்றுக் கொண்டார். இக்காலத்தில் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் வர்த்தக பாடத்தில் ஆசிரிய பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். அத்துடன் ஸ்ரீஜெவர்த்தனபுர பல்கலைக்கழகம் வணிகமாணி சிறப்பு பட்டத்தினைப் பெற்றுக் கொண்டதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரிய நியமனம் பெற்று பகுதித் தலைவராகவும் உப அதிபராகவும் கடமையாற்றினார். இலங்கை அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி தரம் 1 அதிபர் நியமனம் பெற்று யூனியன் கல்லூரியிலேயே 1994இல் அதிபர் பதவியினையும் ஏற்றுக் கொண்டார். அடுத்து தான் கல்வி பயின்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றி (1996-2007) அங்கேயே ஓய்வுபெற்றார். யூனியன் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் தனது அர்ப்பணிப்பான சேவையினால் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அப்பாடசாலைகளை மிளிரச் செய்த பெருமை இவருக்குரியது.

படிக்கும் காலத்தில் கொக்குவில் கிழக்கு சனசமூக நிலையத்தில் பொருளாளராக இருந்துள்ளார். விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அவர் நீண்ட காலம் பொருளாளராகவும் இருந்தார். கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், அப்பாடசாலையின் நிதியங்கள் ஆகியவற்றிலும் இவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பகிரங்க சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம், சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் ஆலய தர்மகர்த்தா சபை, தென்சுன்னையூர் சிவபூதராயர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல பொது அமைப்புகளின் பொருளாளராக கடமையாற்றியுள்ளார்.

சைவ பரிபாலன சபையின் தேர்வுச் செயலாளராக பல ஆண்டு காலம் பணியாற்றி இலங்கை முழுவதும் சைவநெறி மற்றும் தமிழ்மொழித் தேர்வுகள் நடைபெறவும், மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறவும் அயராது பாடுபட்டார். சுன்னாகம் சிவில் பாதுகாப்புக் குழு, சுன்னாகம் அரச மருந்தக நோயாளர் நலன்புரிச் சங்கம், செனட்டர் நாகலிங்கம் சிலை உருவாக்கக் குழு என ஒன்றல்ல இரண்டல்ல பல அமைப்புகளில் அவர் பொறுப்பான பதவியினை வகித்து சமூக சேவையினை ஆற்றியுள்ளார். இவரது சேவையினைக் கௌரவித்து சுன்னாகம் தெற்கு இந்து இளைஞர் மன்றம் சமூகச்சுடர் விருதினை வழங்கிக் கௌரவித்திருந்தது.

தனது வணிகத்துறை அறிவை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வழங்கி, பலரை உயர்த்தி வைத்த சிறப்பும் இவரைச் சாரும். இவரிடம் பயின்றவர்கள் இன்று உயர் பதவிகளை அலங்கரிக்கின்றனர். இவ்வாறு செயற்கரிய செய்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பொ.கமலநாதன்  25-06-2024 அன்று காலமானார். அவரது பூதவுடல் நீங்கி ஒரு வருடஞ் சென்ற போதும், அவரது சேவையும் கீர்த்தியும் என்றென்றும் அழியாது நினைவில் நிற்கும்.

uthayan 15-06-2025



No comments:

Post a Comment