யாழ்ப்பாணத்தின் வற்றாத நீரூற்றுகள்
இயல்வாணன்
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடும் மன்னாரில் இருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவு வரையான பகுதிகளும் சுண்ணாம்புக்கல் எனப்படும் படிவுப்பாறைகளால் ஆனது. இவை மயோசீன் என்றழைக்கப்படும் புவிச்சரிதவியல் காலத்தில் உருவானவை என புவிச்சரிதவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல்வாழ் உயிரினங்களின் சுவடுகள் தரையில் படிந்து நீண்டகால இரசாயன மாற்றத்துக்கு உட்பட்டு சுண்ணாம்புக் கற்பாறைகள் உருவாகின. இப்பாறைப் படைக்கு மேலாக பாறைகள் சிதைவடைந்து உருவான மண்படை காணப்படுகிறது. இப்படை ஓரிரு அடிகளில் இருந்து 30 அடி ஆழம் வரை காணப்படுகிறது.
சுண்ணாம்புக் கற்பாறைகள் நுண்துளைகளைக் கொண்டவை. நீரைக் கசியவிடும் தன்மையுடையன. அத்துடன் வெடிப்புகள், மூட்டுகளையும் கொண்டிருக்கின்றன. மழை பெய்யும் போது அந்த நீரானது இவற்றினூடாக கீழிறங்கி தரைக்கீழ் நீராகத் தேங்கிப் பரவலடைகின்றது. சுண்ணாம்புக் கல் என்பது கல்சியம் காபனேற்று என்ற இரசாயனப் பெயரால் அழைக்கப்படுகிறது.
மழை பெய்யும் போது மழைநீரில் உருவாகும் மென் காபோனிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்கள் காரத்தன்மையுடைய பதார்த்தங்களில் தாக்கம் செலுத்தும் போது பாறைப் படைகளில் அரித்தல் அல்லது தின்னல் செயன்முறை நடைபெறுகிறது.
இத்தின்னல் மற்றும் அரித்தல் செயன்முறை காரணமாக படை படையாகவுள்ள மேற்பகுதி இடிந்து விழ புனற்பள்ளங்கள் என்ற நிலவுருவங்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவான நிலவுருவங்களில் தேங்கியுள்ள நீரானது வற்றாத தன்மையுடையதாக இருக்கின்றது. இவ்வாறான நிலவுருவங்கள் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் உள்ளன. இவற்றை வற்றாக் கிணறுகள் என அழைக்கிறோம்.
நிலாவரை
அத்தகைய வற்றாத கிணறுகளில் முதன்மையானது நிலாவரைக் கேணியாகும். இது யாழ்ப்பாணத்தில் இருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் இராசபாதை வீதி முடிவடையும் இடத்தில் நவக்கிரி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது விளங்குகிறது.
இது எவ்வாறு உருவானது என்பது தொடர்பில் கர்ணபரம்பரைக் கதையொன்றுள்ளது. இராமாயண காலத்தில் இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையில் சிறை வைத்திருந்தான். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வானரப்படை இராமர் அணையெனப்படும் சேதுபாலத்தை அமைத்தது. அதன்வழியாக தனது பரிவாரங்களுடன் இராமபிரான் இலங்கைக்கு வந்தார். அவ்வப்போது வானரப் படைக்கு தாகம் எடுத்த போது இராமபிரான் தனது தோளில் தொங்கிய அம்பை எடுத்து வழி வழியே குத்திச் சென்றார். குத்திய இடத்தில் நீர் பீறிட்டு எழுந்தது. அவ்வாறு இராமர் குத்திய ஒரு இடமே நிலாவரையாகும். அது போலவே பொக்கணை, வில்லூன்றி என்பனவும் உருவாகின என்கிறது இச்செவி வழிக் கதை.
நிலாவரை கடல் மட்டத்தில் இருந்து 0.25 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. 52அடி நீளமும் 37 அடி அகலமும் கொண்ட நீள் சதுரவடிவில் அமைந்த இந்த கேணி போன்ற நீர்நிலை ஆரம்பத்தில் எவ்வளவு ஆழம் கொண்டது என்று அறியப்படவில்லை. அதனால் வானத்தில் உதிக்கும் நிலா வரையான தூரமளவுக்கு ஆழம் இருக்கும் என்று கருதியதால் நிலாவரை என அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
இது 164 ½ அடி ஆழமுடையது என முன்னர் சங்கிலிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். மேற்பரப்பில் இருந்து 50 அடி வரை நன்னீரைக் கொண்டது. 50 முதல் 80 அடி வரை சவர் நீரையும், 80 முதல் 130 அடி வரை கடல்நீரையொத்த உப்புநீரையும், 130 அடியின் கீழே கடல்நீரை விடக் காரமான உப்புநீரையும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 1824ஆம் ஆண்டில் அப்போதய அரசாங்க அதிபராயிருந்த பேர்சிவல் ஒக்லன்ட்டயிக்கின் (Pநசஉiஎயட யுஉமடயனெ னலமந) காலத்தில் நிலாவரைக் கேணியின் ஆழம், நீர் வற்றும் வேகம் என்பவற்றைக் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீராவியால் இயங்கும் நீரிறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி நீர் இறைக்கப்பட்டது. 8 நாள்களாக நீரிறைத்தும் நீர் வற்றவில்லை. 1946ஆம் ஆண்டில் அதிகவலுக் கொண்ட நீரிறைக்கும் இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கலன் வீதம் ஒரு வாரத்துக்கு நீரிறைக்கப்பட்டது. ஆயினும் நீர் வற்றவில்லை. ஆனால் நீரின் தடிப்பில் மாற்றம் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.
2016ஆம் ஆண்டு கடற்படை சுழியோடிகள் மற்றும் ரோபோவின் உதவியுடன் ஆழம், நீரின் தன்மை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 55.5 மீற்றர் அல்லது 182 அடி ஆழமானது எனக் கண்டறியப்பட்டது. அத்துடன் நீண்ட காலத்துக்கு முன்னர் விழுந்திருந்த மூன்று மாட்டு வண்டில்கள் அடியில் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் நிலத்தடி நீரோட்டங்களுடனான தொடர்பும் கண்டறியப்பட்டது. நாலாதிசைகளிலும் வேகமானதும், மிதமானதுமான நீரோட்டங்கள் கண்டறியப்பட்டன. முன்னைய காலத்தில் நிலாவரையில் தேசிக்காய் போட்டால் கீரிமலையில் அதை எடுக்கலாம் எனக் கூறக் கேட்டிருக்கிறோம். அதனை மெய்ப்பிப்பது போல இந்த நீரோட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலாவரைக் கிணற்றில் இருந்து அயற் பிரதேசங்களின் விவசாய நடவடிக்கைக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் பின்னர் அதனை தொல்பொருள் திணைக்களம் கையேற்றதைத் தொடர்ந்து அது நின்று போனது. குறைந்தளவு பிரதேசத்துக்கு நிலாவரை மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளலாம். வல்லை வெளியின் தென்பகுதியை மண்ணிட்டு நிரப்பி மாகாண அரச நிறுவனங்களையும் குடியிருப்புத் தொகுதிகளையும் அமைக்கலாம். அந்த இடத்துக்கான நீராதாரத்தை நிலாவரையில் இருந்து குழாய் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பொக்கணை
சுன்னாகத்தில் இருந்து ஊரெழு நோக்கிச் செல்லும் திலீபன் வீதியில் உள்ளது பொக்கணை என்னும் வற்றாத நீரூற்றாகும். இது யாமா எனவும் அழைக்கப்படுகிறது. சிறிய பள்ளமாக பொந்து போலக் காணப்படும் இதற்குள் இருக்கும் நீர் வற்றுவதில்லை. தற்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அருகில் குழாய்கிணறு தோண்டப்பட்டு அதிலிருந்து பெறப்படும் நீர் குழாய் வழியாக மானிப்பாய், கந்தரோடை, கட்டுடை, நவாலி முதலிய இடங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
முன்னர் காற்றாடி மூலமான நீரிறைக்கும் செயற்பாடும், நீர்த்தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்சும் செயற்பாடும் இடம்பெற்று வந்ததாகவும், யுத்தகாலத்தில் இச்செயற்பாடு நின்று போனதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மழைகாலத்தில் வெளியில் உள்ள மழைநீர் இதற்குள் புகுந்து மறைந்து விடும். புயல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் போதும் வெள்ளப்பெருக்கின் போதும் இதற்குள் இருந்து நீர் பொங்கிப் பிரவகிப்பதையும் காண முடியும்.
பொக்கணை பற்றி ஊரில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு கதை உள்ளது. அருகில் உள்ள ஆலய பூசகர் பொக்கணையின் அடியில் தங்கத்தினாலான சூலம் இருப்பதாகக் கனவு கண்டார். அதனை அவர் ஊர் மக்களிடம் கூறியிருந்தார். அதனைக் கேட்ட ஒருவர் பொக்கணையின் அடிப்பகுதிக்குள் மூழ்கிச் சென்று பார்த்து விட்டு மேலெழுந்து வந்து “ஒரு சூலம் இருக்கிறது. அதைச் சுற்றி பாம்புகள் இருக்கின்றன. கீழே பெரிய ஆறு ஓடுகிறது” என்று கூறினார். மீண்டும் மூழ்கி சூலத்தை எடுத்து வரச் சென்றவர் மீண்டு வரவில்லை.
இடிகுண்டு
நவாலியில் உள்ள கிராய் என்ற பகுதியில் வயல்நிலங்களுக்கு அருகே ஒரு குட்டை போலுள்ள வற்றாத நீரூற்று இடிகுண்டாகும். “இது 1905ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20ஆந் திகதி விடிகாலையில் உருவானது. திடீரென்று இடி இடிப்பது போல பெருஞ் சத்தம் கேட்டது. நிலம் இடிந்து விழ ஒரு அடி உயரத்துக்கு உப்புநீர் கொந்தளித்து எழுந்தது. மாலையில் அந்நீர் வற்றிவிட அந்த இடத்தில் 10 அடி அகலமும், 30 அடி நீளமும் 30 அடி ஆழமும் கொண்ட கேணி உருவானது” என பொன்னையா மாணிக்கவாசகர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். வீதியோரமாக அதனை இன்றும் காணலாம்.
அல்வாய் மாயக்கை குளம், குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு என்பனவும் வற்றாத நீர்நிலைகளாகும்.
தாய்வீடு கனடா
No comments:
Post a Comment