Thursday, October 19, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 17




 முன்றில் 17

இயல்வாணன்

தமிழிலக்கண, இலக்கிய, சைவசமய அறிவு நிரம்பப் பெற்ற மரபுக் கவிதை கைவந்த வல்லாளர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம். பலநூறு மரபுக் கவிதைகளையும், பிரபந்தங்களையும், சிறுகதை, கவிதை, குறுங்கதை, நாவல் என உரைநடை இலக்கியங்களையும் படைத்த பன்முகப் படைப்பாளியாக இவர் விளங்குகிறார். 1939ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 28ஆந் திகதி இணுவிலில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை இணுவில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும்(தற்போதய இணுவில் இந்துக் கல்லூரி),  இடைநிலைக் கல்வியை உடுவில் மான்ஸ் ஆங்கில பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரியிலும்(தற்போதய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கற்றார்.  கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிநுட்பக் கல்வியைத் தொடர்ந்தார்.

நாவலர் பாடசாலையில் நடைபெற்ற பாலபண்டித வகுப்பில் கற்றுச் சித்தியடைந்ததுடன் 1967இல் பண்டித பரீட்சையில் திறமைச் சித்தி பெற்றார். ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 1964இல் நாவற்குழி அ.மி.த.க.பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். 1967இல் நல்லூர் ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியர் பயிற்சி பெற்று, 1968இல் கண்டி புசல்லாவ திருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றார். தொடர்ந்து புசல்லாவ சரஸ்வதி வித்தியாலயம், இணுவில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து பல நன்மாணாக்கரை உருவாக்கினார்.

வாணிதாசனின் கவிதைகள் மீதான ஈர்ப்பினால் தனது 13வது வயதில் கவிதை படித்த இவர்  பரமேஸ்வராக் கல்லூரியில் வித்துவான் க.வேந்தனாரிடம் கல்வி கற்ற காலத்தில் நண்பனுக்கு எழுதிய கவிதை மற்றவர்களால் பாராட்டப்பட்ட போது ஊக்கம் பெற்றார். சக நண்பனான சி.முருகவேள்(பின்னாளில் பேராதனை பல்கலைக்கழக நூலகராயிருந்தவர்) கொடுத்த காதல் என்ற தலைப்பிலான ஆங்கிலக் கவிதையை
குன்றின் சாரலில் வழியதனருகில்
நின்று சிதைந்த சமாதியின் மருங்கில்
அன்றொரு நாள் நான் கழித்ததோர் மணியை
என்றும் என் சிந்தையில் தேக்கி மகிழ்வேன்
என்று சில நிமிடங்களில் மொழிபெயர்த்துக் கொடுத்து ஆசிரியரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.

பரமேஸ்வராக் கல்லூரியில் கற்ற காலத்தில் அல்லி சஞ்சிகையில் இவரது முதல் கவிதை செந்தாமரை மலரே என்ற தலைப்பில் வெளிவந்தது. கல்லூரி சஞ்சிகையில் தீந்தமிழீழம் என்ற கவிதையை அன்று(1959) எழுதியமையும் குறிப்பிடத்தக்கது. பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் காவியம் தந்த அருட்டுணர்வில் இவரெழுதிய எழிலி காவியம் கலைச்செல்வி ஆசிரியர் சிற்பியின் ஆதரவுடன் செட்டிகுளம் பாலன் பதிப்பக வெளியீடாக 1962இல் வெளிவந்தது. இந்நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. சிற்பி சிவசரவணபவன் ஆசிரியராகவிருந்த கலைச்செல்வி கலை இலக்கிய சஞ்சிகையில் துணை ஆசிரியராக இவர் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

1963இல் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை மட்டக்களப்பில் 3 நாள் முத்தமிழ் விழாவினை நடத்தினார். அந்த விழாவில் நாவற்குழியூர் நடராசன் தலைமையில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. மஹாகவி, நீலாவணன், முருகையன், அம்பி, திமிலைத்துமிலன், சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் இணைந்து கவிபாடும் வாய்ப்பை எஸ்.பொ. இவருக்கு வழங்கினார். அன்று முதல் இலங்கை முழுவதும் எண்ணற்ற கவியரங்குகளில் இவர் பங்குபற்றித் தன் கவித்திறத்தால் சபையைக் கட்டி வைத்திருக்கிறார். இவரது தலைமையில் கவிதை பாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது பேறே. இவரது கவியரங்கக் கவிதைகள் தண்டலை என்ற பெயரில் 1966இல் வெளியாகியது.
இன்பவானில்(1971), எரிமலை தந்த விடுதலை(1988), நாடும் வீடும் - கவியரங்கக் கவிதைகள் (2001), ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள்(2002), திறந்தவெளிச் சிறையில் ஒரு தேசம்(2017), விலங்கு பறவைமுதலான கவிதை நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பாநாடகங்கள் பஞ்சாட்சரம் பாநாடகங்கள்(2005) என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

பல ஆலயங்களுக்குப் பிரபந்தங்களும் பாடியுள்ளார். இவை பல நூல்களாக வெளிவந்துள்ளன. இணுவை முருகன் பிள்ளைத்தமிழ், இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ், பொறிக்கடவை அம்மன் தலபுராணம், உடுப்பிட்டி மனோன்மணி அந்தாதி, கண்ணன் கவசம், தெண்டைமானாறு சந்நிதி வெண்பா, கனடா துர்க்கேஸ்வரம் அன்னை துர்க்கை அடிதொழு வெண்பா என்பன குறிப்பிடத்தக்கன. திருவூஞ்சல், அம்புலித்தூது, திருவிரட்டை மணிமாலை, திருப்பள்ளியெழுச்சி, மும்மணிக்கோவை, சிந்து முதலான பிரபந்தங்களை பல ஆலயங்களுக்குப் பாடியுள்ளார். இவற்றில் 30ஆலயங்களுக்குப் பாடிய பிரபந்தங்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியீடு காணவுள்ளது.
கீர்த்தனைகள், பக்திப் பாடல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். பிரபல பாடகர்கள் உன்னி கிருஸ்ணன், மனோ, மதுபாலகிருஸ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஹரிஸ் ராகவேந்திரா, மாணிக்கவிநாயகம், பம்பே ஜெயஸ்ரீ முதலானோரின் குரல்களில் இவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இவரெழுதிய 50ற்கும் மேற்பட்ட தாயக விடுதலைப் பாடல்களை சாந்தன், திருமலை சந்திரன், மணிமொழி, ராதிகா சுப்பிரமணியம், தவமலர் ஆகியோர் பாடியுள்ளனர். இசைவாணர் கண்ணன் இவரது பாடல்களுக்கு இசையமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவரெழுதி தமிழீழ வானொலியில் ஒலிபரப்பாகி வந்த பிரபாகரப் பெருங்காப்பியம் மூன்று பாகங்களும், 47 படலங்களும், 1300 கவிதைகளும் கொண்ட பெரும்படைப்பாகும். எனினும் அது யுத்தத்துக்குள் தொலைந்து போனமை அவருக்குப் பெரும் இழப்பாகும். மாவீரர் காவியங்களையும் இவர் பாடியுள்ளமை குறிப்பிடத்த்க்கது.
இவரது சிறுகதைகள் சின்னஞ்சிறுகதைகள்(1969), வேள்விநெருப்பு(2003), அன்னைமண்(2008), இந்தத் தீபாவளி தேவைதானா(2011), வண்டி முன்னாக மாடு பின்னாக(2012), கொம்புத்தேன்(2014) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. இவரெழுதிய நாவல் கூலிக்கு வந்தவன் என்ற தலைப்பில் 2003இல் வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். இவை சின்னப்பாப்பா பாட்டு(2004) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
இவரெழுதிய இலக்கணப் பூங்கா தமிழ் கற்கும் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் துணை நூலாக 15 பதிப்புகள் கண்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளமை முக்கியமானதாகும்.
சிறந்த சொற்பொழிவாளரான இவர் ஈழத்திலும், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சமய, இலக்கிய, அரசியல் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
மரபிலக்கியவாதிகள் நவீன உரைநடை இலக்கியங்களில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் புனைகதைத் துறைக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திய இப்பேராளுமை 84 வயதிலும் தளராத தமிழ்ப்பணியாற்றி வருகிறார். தனது தடத்தில் பல இளங்கவிஞர்களையும், பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமையும், பல இலக்கிய சமய அமைப்புகளை உருவாக்கிய பெருமையும் இவரைச் சாரும். இப்பேராளுமை நூறாண்டு நிறைவாக வாழ வாழ்த்துகிறோம்.

20-08-2023 உதயன் சஞ்சீவி




No comments:

Post a Comment