Thursday, October 19, 2023

மதிப்பீட்டுரை

 கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய 30 கோவில் நூல்கள் 

இயல்வாணன்

தமிழிலக்கண அறிவும், பாரம்பரிய-மரபு சார்ந்த- இலக்கிய அறிவும், சமய அறிவும் கைவரப்பெற்றவர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள். இத்தகைய அறிவு கைவரப்பெற்ற பல பண்டிதர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் தமது மரபார்ந்த சிந்தனைக்குள் மட்டுப்படுத்தப் பட்டவர்களாக, அதற்கு மட்டுமே முன்னுரிமை தருபவர்களாக இருந்துள்ளனர். அவர்களால் பல மரபிலக்கியப் பனுவல்களைத் தர முடிந்துள்ளது.

இதற்கப்பால் இந்தப் புலமையோடு நவீன இலக்கியப் பரிச்சயமும், அதன் மீதான முனைப்பும் கொண்டு இலக்கியம் படைத்தவர்களும் உளர். பண்டிதர் க.சச்சிதானந்தன், பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே), மதுரகவி இ.நாகராஜன், இ.முருகையன், வித்துவான் க.சொக்கலிங்கம் (சொக்கன்), மஹாகவி து.உருத்திரமூர்த்தி, கவிஞர் சோ.பத்மநாதன் என்று குறிப்பிடத்தக்க ஆளுமைகளை இவ்வாறு கண்டு கொள்ளலாம்.

அத்தகைய ஒருவராக, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெளிப்பாட்டைச் செய்த ஒருவராக பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரத்தை நாம் அடையாளங் காண முடியும். ஒரு மரபுக் கவிஞராகவே அதிகம் அடையாளம் காணப்பட்ட பஞ்சாட்சரம் அவர்கள் பலநூறு மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், குறுங்கதை என உரைநடை இலக்கியங்களையும் படைத்துள்ளார்.

நாடறிந்த கவிஞராக கவியரங்க மேடைகள் பல கண்ட ச.வே. பஞ்சாட்சரம் ஈழத்தின் மூத்த கவிஞர்கள் நீலாவணன், மஹாகவி, முருகையன், அம்பி, திமிலைத்துமிலன் முதலான கவிஞர்களுடன் இணைந்து மேடையில் கவிதைகள் பாடியுள்ளார். இவரது தலைமையில் கவியரங்கில் கவிதை பாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தமை பேறே.

தண்டலை, எரிமலை தந்த விடுதலை, நாடும் வீடும், ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள், திறந்தவெளிச் சிறையில் ஒரு தேசம், விலங்கு பறவை, பஞ்சாட்சரம் பாநாடகங்கள் ஆகிய நூல்கள் மூலம் இவரது கவிதை ஆற்றலை நாம் கண்டுணர முடியும். 3 பாகங்கள், 47 படலங்கள்,1300 பாடல்கள் கொண்ட பிரபாகரப் பெருங்காவியமும் இதிலொன்று. ஆயினும் வானலைகளில் தவழ்ந்த இக்காவியத்தின் பிரதிகள் இன்று இல்லாதமை இழப்பே.

இவரது சிறுகதைகள் வேள்வி நெருப்பு, சின்னஞ்சிறுகதைகள், அன்னை மண், இந்தத் தீபாவளி தேவைதானா? வண்டி முன்னாக மாடு பின்னாக, கொம்புத்தேன் ஆகிய  நூல்களாக வெளிவந்துள்ளன. கூலிக்கு வந்தவன் இவரெழுதிய நாவலாகும். சின்னப்பாப்பா பாட்டு என்ற சிறுவர் நூலையும் வெளியிட்டுள்ளார். இவரது இலக்கண நூலான இலக்கணப் பூங்கா பாடசாலை மாணவர்களுக்கு வரப்பிரசாதமான 15 பதிப்புகள் கண்ட துணை நூலாகும்.

இதற்கப்பால் நூறு வரையான பிரபந்தங்களை இவர் ஆக்கியுள்ளார். அவை ஆலயங்களாலும்இ அடியவர்களாலும் தனித்தனி நூல்களாக்கப்பட்டுள்ளன. பல வெம்போரில் வீழ்ந்து காணாமலும், அழிந்தும் போய்விட்டன. இருப்பவற்றுள் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் உள்ள ஆலயங்கள் மீது பாடப்பட்ட 30 பிரபந்தங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறப்பு இணைப்பாக சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் திருப்பள்ளியெழுச்சி இடம்பெற்றுள்ளது.

இவற்றில் எட்டு திருவூஞ்சல்கள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஏழு ஆலயங்களுக்கும், ஒன்று பலாலி இராஜேஸ்வரி மனோன்மணி அம்பாளுக்கும் பாடப்பட்டுள்ளன. நான்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டு நான்மணிமாலை, இரண்டு மும்மணிக்கோவை, மூன்று திருவிரட்டை மணிமாலை, மூன்று சிந்து, இரண்டு பதிகம், சுன்னாகம் ஐயனாருக்கு அம்புலித்தூது, இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு வெண்பா, வன்னேரிக்குளம் ஐயனாருக்கு அருள்மங்கலம், அக்கராயன் சித்தி விநாயகருக்கு திருவடிபுகற்பா, கண்ணனுக்கு கவசம் என 31 பிரபந்தங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.

பிரபந்தங்கள் எனப்படுபவை காவியத்தன்மை இல்லாத இலக்கியமாகும் எனக் கூறுவர். இசையோடு பாடப்படுவது எனவும் கருத்துண்டு. நூலாசிரியர் சில பிரபந்தங்களைப் பாடுவதற்கு இறைவன் கனவில் தோன்றி பாட வைத்துள்ளதாக எழுதியிருக்கிறார். அது சாத்தியமானதே. நானும் திருவூஞ்சல், திருப்பள்ளியெழுச்சி, பதிகம் பாடியிருக்கிறேன். அது ஒரு இறையனுபவப் பரவசநிலையிலேயே சாத்தியமாயிருந்திருக்கிறது.

படைப்பாளிகள் காலத்தின் சாட்சிகள். காலத்தில் ஏற்படும் விளைவுகள் அவர்களைப் பாதிக்கும். நாயன்மார்களின் காலத்தில் இருந்து இன்றைய கவிஞர்கள் வரை காலத்தின் சாட்சியாக அவர்களது பாடல்கள் இருந்துள்ளன. நோயை நீக்கவும், வெவ்வினைகள் நீங்கவும், பஞ்சத்தில் இருந்து மீளவும் இறைவனை வேண்டிப் பாடிய பிரபந்தங்கள் பலவும் எம்மத்தியில் உள்ளன. கவிஞர் ச.வே.பஞ்சாட்சரமும் காலத்தை தனது பிரபந்தங்களில் பிரதிபலித்துள்ளார்.

பாம்பைக் கயிறாகப் பற்றிமலை ஏறுநராய்ச்

சாம்பவி தாம்தருக்கும் சொத்தெல்லாம் - தாம் விட்டுச்

செம்மணி வீதியிலே செத்தபிண மாய் நகர்ந்தார்

அம்மணியே! வாழ்விதுதானா? 

என்று 1995 மகா இடப்பெயர்வை முன்வைத்து நுணாவிற்குளம் கண்ணகை அம்மனிடம் இறைஞ்சுகிறார்.

இதே பிரபந்தத்தில் இன்னுமொரு இடத்தில் மிகநுட்பமாக இன்னொரு விடயத்தைப் பேசுகிறார்.

அன்னை செய்கையும் தந்தை செய்கையும்

அண்ணன் செய்கையும் தம்பி செய்கையும்

அந்நியன் அயல் பகைவன் செய்கையும்

அரசன் செய்கையும் அடிமை செய்கையும்

என்ன செய்கையும் எவரின் செய்கையும்

இன்னதேசரி என்று திட்டமாய் 

அன்னை நீநிற்கும் அகங்கள் ஏற்குமேல்

அவைகள் மட்டுமே அறங்கள் நல்லறம்

என்று இறைவியிடம் சொல்கிறார். இறைவியே! இதையெல்லாம் அறமாகப் பார்க்கிறாயா? என்று கேட்பது போலவும், எங்கள் செயல்களின் விளைவை நாங்கள் அனுபவிக்கும் பேறு கிடைத்ததா? என்று கேட்பது போலவும் நேரெதிரான அர்த்தங்களை வெளிப்படுத்தும் வகையில் பொருள்கோடத் தக்கதாக இப்பாடலைப் கட்டமைத்துள்ளார்.

நுணாவிற்குளம் கண்ணகையம்மன் கோவிற்சூழல் எனக்குப் பரிச்சயமானது. எனது புகுந்தவிடம் அது. அந்தச் சூழலை, அதன் வனப்பை, இறைவியின் அருட்சிறப்பை நான்மணி மாலையாகத் தந்துள்ளார்.

“கொன்றை ஆல் கிஞ்ஞாக் குளிர்வனஞ் சூழ்ந்தொளிர் கண்ணகியே”

“கதிர்கள் அசையும் கழனி வரம்பில் வரிசைகளாய் 

மதர்களைக் கற்றை சுமந்துசெல் மாதர் மகிழ்ந்திசைக்கும்”

“மருதுநீ ழலில் வாய் குளத்தினில் 

மன்னி நீந்திடும் மங்கை மார்முகம்

கரிய நாகமாய் கூந்தல் கவ்விடும்

காட்சி கண்டயர் கந்த மைந்தனின்

அரிய அன்னையே!”  

என நுணாவிலின் எழிலைப் பல பாடல்களில் பாடியுள்ளார்.

இவர் எழுதிய திருப்பள்ளியெழுச்சிகளிலும் சூழல் விபரிப்பின் சிறப்பைக் காணலாம். மல்லாவி யோகபுரநாதர் திருப்பள்ளியெழுச்சியின் பாடலொன்று இவ்வாறுள்ளது.

பொய்கையில் தாமரை பூட்டுவாய் திறப்ப

போற்றியுன் நாமங்கள் புளகிக்க என்றே

மெய்குளிர் ஓடைநீர் வீழ்ந்தாடி மீண்டோம்

விழிமலர் திறந்த நின் விளங்கெழில் பருக

செய்வன புன்னகை தேன்பொழில் மலர்கள்

செல்லுவோம் சேருவோம் சிவன் கழல் என்றே.

வழக்கமான கற்பனைகளிலிருந்து விலகி சூழலின் விகசிப்பைத் தரிசிக்க வைக்கும் வகையில் இவரது திருப்பள்ளியெழுச்சி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னொரு திருப்பள்ளியெழுச்சி சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேச்சுரருக்குப் பாடப்பட்டது.

சுவிற்சர்லாந்து பனிவிழும் தேசம். காலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணி நடைபெறும். குளிரைத் தாங்கும் ஆடை அணிகளுடனேயே நடமாடலாம். 

பாதையில் உறுமுவ பனிவழிப் பான்கள்

பகற்பணி யாளர்செல் உந்தொலி பம்மும்

காதுமெய் மூடிய கம்பளி ஆடைக்

கன்னியர் எம்பாவை பாடினர் தெருவில்

ஈதுநற் புலர்வென்றே இல்லங்கள் யன்னல்

எட்டியே பார்ப்பன வைகறை விளக்கும் 

பூதமை ஏந்தியே பூவையர் வந்தார்

புரங்கள் செற்றீர் பள்ளி எழுந்தருள்வீரே!

சுவிற்சர்லாந்தின் இயற்கை நிலைமையை உள்ளடக்கிய சூழல் விபரிப்பாக இத்திருப்பள்ளியெழுச்சி அமைந்திருப்பது முக்கியமானதாகும்.

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் நான்மணி மாலையில் வரும் அகவற்பா தமிழர் தொன்மையை நினைந்து அன்றைய அவல வாழ்வைப் பேசுகிறது.

வாழி நீ அம்மா வயங்கருள் விளக்கே!

ஈழமண் தமிழன் அரசுகள் எத்தனை?

நல்லையில் வன்னியில் வல்லி புரத்தினில்

தம்பல காமத்தில் சால்கோண மலையினில்

எம்பழம் அரசுகள் இருந்ததை மறைத்து வெம்

செய்கையர் தமிழினச் சிதைப்பினில் முனைந்து

வெங்களம் படைத்தெமை விரட்டிடும் வேளையில்

அடைக்கலம் அளித்தெம் புரவலர் அணிக்கும்

துடித்துவந் தண்டிய சோரமில் தமிழர்க்கும்

விடுதலைத் தவத்துக்குந் திடவலு வேற்றிட 

என்றே ஈரைம் பானாண் டின்முன்

அன்றே இரணை மடுவாய் அமைந்தோய்

தொடர்ந்த யுத்தமும் இடம்பெயர்வுமான வாழ்வைப் பேசும் வன்னேரிக்குளம் ஐயனார் திருவூஞ்சலின் காப்புச் செய்யுள்  இவ்வாறு அமைகின்றது

வேரோடு பிடுங்குண்டோம் வீசப்பட்டோம்

வீடின்றி நாடெல்லாம் அலைய நாங்கள்

ஊரோடு தங்குகின்றீர் எனினும் நும்தம்

உண்மையருள் நம்முன்னே உலவிக் காக்கும்

சீராரும் இணுவை செகராசக் கோனே!

செழும்வன்னி வன்னேரிக் குளத்தில் வாழும்

காராளும் சாத்தன்மேல் ஊஞ்சல் பாடக்

காப்பருள்வீர் கவிதருவீர் கால்கள் போற்றி

இவரது காப்புச் செய்யுள்கள் எல்லாமே இணுவில் செகராசசேகரப் பிள்ளையாரை முன்வைத்தே பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுவது முக்கியமானது. 

‘எம்மினத்தின் எதிர்காலம் ஈழத்திலே இடையூறு மயமாகவும் நிச்சயமற்றும் காணப்படும் நிலையிலும் நிகழ்காலத்தில் வாழும் மூத்த தலைமுறைப் பலர் அதுபற்றிக் கவலையே இல்லாமல் சுயவிளம்பரஇ தற்புகழ்ச்சிப் பல்லக்குகளில் ஏறிப் பவனி வருவதிலேயே முனைப்பாக அலைவதன் மூலம் தம் பிற்சந்ததிகளின் எதிர்காலத்தைப் பாலைவனமாக்குவதோடு அவர்கள் மனங்களுக்கும் அந்நியர் ஆகி விடுகின்றனர்.’

இதுதான் இன்றைய பொதுநிலைமை. காலச் சூழலை உள்ளார்ந்து நோக்காத நிலை எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிவிடும் என்பது உண்மையே. 

தங்கம்மா அப்பாக்குட்டி கூறுவது போல ‘அரசியல் கவிஞராகவும்இ ஆன்மீகக் கவிஞராகவும்இ புரட்சிக் கவிஞராகவும்’ ச.வே.பஞ்சாட்சரம் விளங்குகிறார். எனில் அவருடைய சமூகப் பொறுப்பு, சமூகம் மீதான அன்பு, அக்கறை,



சமூக நோக்கு என்பவையே அவரை இத்தகைய பாத்திரத்தை வகிக்க வைத்துள்ளன.





No comments:

Post a Comment