Thursday, October 19, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 18



 முன்றில் - 18


ஈழத்துப் படைப்பாளிகள் பலரை உருவாக்கிய பெருமை மகாஜனாக் கல்லூரிக்கு உண்டு. அதனை நிறுவிய பாவலர் துரையப்பாப்பிள்ளை பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் வழி வந்த சின்னப்பபிள்ளை, செ.கதிரேசர்பிள்ளை என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. அவர்களில் பலருடைய கவிதைகள் மகாஜனக் கவிதைகள் நூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளது. அந்தப் பண்ணையில் தோன்றிய முதன்மையான பெண் ஆளுமை கோகிலா மகேந்திரன். இவ்வாண்டு யாழ்ப்பாண மாநகர சபையால் வழங்கப்பட்ட இயல் துறைக்கான அரசகேசரி விருதைப் பெற்றுள்ளார்.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், கட்டுரை, பத்தி, சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் அனைத்துப் பக்கங்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய முதன்மைப் பாத்திரம் உளவியல்துறையே. பின்னாளில் அதுவே அவரது அடையாளப்படுத்தத்தக்க துறையாக அமைந்தது.
கவிஞரும் உரையாசிரியருமாக விளங்கிய சிவசுப்பிரமணியத்தின்(விழிசைச்சிவம்) மகளாக 1950ஆம் ஆண்டு நவம்பர் 17ஆந் திகதி தெல்லிப்பழை விழிசிட்டியில் பிறந்த கோகிலாதேவி பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில்(1955-58) தனது ஆரம்பக் கல்வியையும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில்(1959-68) இடைநிலைக் கல்வியையும் பெற்றுக் கொண்டார். 1970இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி மருத்துவத்துறையில் மூன்றாண்டுகள் கற்ற போதும் கற்கைநெறியைப் பூரணப்படுத்தவில்லை. உளவளத்துணையாளர்(1995), வட இலங்கை சங்கீத சபையின் நாடக கலாவித்தகர்(2002) பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

 1974இல் விஞ்ஞான பாட ஆசிரிய நியமனம் கிடைத்து பொலிகண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் பணியினை ஆரம்பித்தார். தொடர்ந்து கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயத்தில் கற்பித்தார்.(1976-78) பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் ஆசிரிய பயிற்சியினைப்(1979-81) பெற்றுக் கொண்டார். பயிற்சியின் பின்னர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியிலும்(1982-93), யூனியன் கல்லூரியிலும் கற்பித்தார்.
1994இல் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபர் பொறுப்பினையேற்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தில் 8ஆண்டுகள் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்றார். தொலைக்கல்வி போதனாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் மற்றும் அறிகைச் சிகிச்சை விரிவுரையாளர், சாந்திகம் நிறுவனப் பணிப்பாளர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பதவிகளையும் வகித்த இவர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழ் மற்றும் சமயபாட வருகை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

கோகிலா சிவசுப்பிரமணியமாக எழுத்துலகில் பிரவேசித்த இவர் திருமணத்தின் பின்னர் கோகிலா மகேந்திரன் என்ற பெயரில் எழுதி வருகிறார். விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் முதலிய புனைபெயர்களிலும் இவர் எழுதியுள்ளார். 1972இல் குயில் சஞ்சிகையில் எழுதிய அன்பிற்கு முன்னால் சிறுகதையுடன் இலக்கிய உலகிற் பிரவேசித்த இவர் சுடர், ஈழநாடு, மித்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், முரசொலி எனப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
 இவர் எழுதிய 75வரையான சிறுகதைகள் மனித சொரூபங்கள்(1982), முரண்பாடுகளின் அறுவடை(1983), அறிமுகவிழா(புலோலியூர் ஆ.இரத்தினவேலோனுடன் இணைந்து- 1984), பிரசவங்கள்(1986), வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்(1997), முகங்களும் மூடிகளும்(2003), வரிக்குயில்(2016) ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மனதைக் கழுவும் மகாசமத்தர்கள்(2008), புலச்சிதறல் நெஞ்சம்(2013), சிறுகதை(2014) முதலிய தொகுப்புகளும் இவரது புனைகதைத் துறைப் பங்களிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. 

துயிலும் ஒருநாள் கலையும்(1986), தூவானம் கவனம்(1989), சந்தனச் சிதறல்கள்(2018) ஆகியவை இவர் எழுதி  வெளியிட்டுள்ள நாவல்களாகும். சிறுவர் இலக்கியஞ் சார்ந்தும் இவர்  நூல்களை எழுதியுள்ளார். விஞ்ஞானக் கதைகள்(2000), அறிவியல் கதைகள்(2020) ஆகிய நூல்கள் மூலம் சிறுவர்களின் அறிவியல் விருத்திக்குப் பங்களித்துள்ளார்.
உளவளத்துணை சார்ந்து பல விரிவுரைகளை மேற்கொண்டும் பயிற்சிகளை வழங்கியும் உள்ள இவர் அது தொடர்பான நூல்களை எழுதியும் இணைந்து தொகுத்தும் உள்ளார்.  அவ்வகையில் மனக்குறை மாற வழி(1996), எங்கே நிம்மதி(2000), சிறுவர் உளநலம்(2002), மகிழ்வுடன் வாழ்தல்(2005), சின்னச் சின்னப் பிள்ளைகள்(2005), உள்ளக் கமலம்(2006), முற்றத்தில் சிந்திய முத்துக்கள்(2006), சுனாமியில் சிதறிய சித்திரங்கள்(2006), மனச்சோர்வு(2006), மனமெனுந் தோணி(2008), உள்ளம் பெருங்கோயில்(2009), உள்ளத்துள் உறைதல்(2011), சிறுவர் பாதுகாப்பு(2015), பதின்ம வயதுப் பிரச்சினைகளும் அவற்றைக் கையாளுதலும்(2016), வாழ்வின் முன்னேற்றத்துக்கான  கற்றல்(2020), சீர்மியத்தில் சிறப்பு முறைகள்(2020), குடும்பம் ஒரு கதம்பம்(2023) முதலான நூல்கள் மூலம் உளவளத்துணை சார்ந்த ஆற்றுப்படுத்தலுக்குப் பெரிதும் பங்களித்துள்ளார்.
இவரது நேர்கொண்ட பாவை(2015) பெண்ணிய உளவியல் சார்ந்த கட்டுரை நூலாகும். திருமனிதர் வாழ்வு(2017) சமூக உளவியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். தங்கம்மா அப்பாக்குட்டி பற்றிய தங்கத்தலைவி(2000) தனிமனித ஆளுமையை வெளிப்படுத்தும் நூலாகும். விழிமுத்து(1999), அரங்கக்கலையில் ஐம்பதாண்டு(2003), விழிசைச்சிவம்(2009) ஆகிய இத்தகைய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
நாடகத்துறையிலும் இவர் தனது அடையாளத்தைப் பதித்துள்ளார். நாடக எழுத்தாளராக, நடிகையாக, இயக்குநராக, தயாரிப்பாளராக, ஒப்பனைக் கலைஞராக பல்துறை ஆளுமையுடன் இவர் பயணித்துள்ளதுடன் சோலைக்குயில் அவைக்காற்றுகைக் கழகத்தை நிறுவி பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். கோலங்கள் ஐந்து(ஐந்து பேரின் ஐந்து நாடகங்கள்- 1994), கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு(1997), குயில்கள்(2001) ஆகியவை நாடகத்துறை சார்ந்த இவரது நூல்களாகும்.
தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தை நிறுவியவர்களில் ஒருவரான இவர் அதன்மூலம் பல நூல்களை வெளியிட்டும், நிகழ்ச்சிகளை நடத்தியும் இலக்கியத்துறைக்குப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இவரது கலை இலக்கிய சேவையைப் பாராட்டி இலக்கிய வித்தகர், சமூக திலகம், கலாபூ~ணம், சமூகஒளி, கலைப்பிரவாகம் முதலிய கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பலவழிகளிலும் இலக்கியம், அறிவியல், சமூகவியல், உளவியல், சமயம் சார்ந்து எழுதியும், பேசியும் வரும் கோகிலா மகேந்திரன் 73 வயதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவரது அறிவும் அனுபவமும் ஆளுமைப் பரிமாணமும் சமூகத்துக்கு மேலும் பயன்பட வேண்டும்.

உதயன் சஞ்சீவி 17-09-2023

No comments:

Post a Comment