Thursday, October 19, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 20



 முன்றில் - 20

இயல்வாணன்
இலங்கை அரசாங்கத்தால் இலக்கியத்துறைப் பங்களிப்புக்காக வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய ரத்னா விருதை இவ்வாண்டு தமிழ் மொழி சார்ந்து மூத்த எழுத்தாளர் க.சட்டநாதன் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, குறுநாவல், நாவல், விமர்சனம் எனத் தொடர்ந்து புனைவிலக்கியம் படைத்து வரும் க.சட்டநாதன் 22-04-1940இல் வேலணையில் பிறந்தார். இவரது பேரனார் பேரம்பலம் வேலணையில் பெயர்பெற்ற தமிழ்ப் புலவர்.  தந்தையார் கனகரத்தினமும் ஒரு தமிழ்ப் புலவராக விளங்கினார்.


இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் நிறைவு செய்து இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். இவரது உயர் கல்வியை சென்னை விவேகானந்தா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கற்று 1964இல் விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஊர் திரும்பிய இவர் சிறிது காலம் சுயமுயற்சியாளராக கால்நடைப் பண்ணையொன்றை வேலணையில் நிர்வகித்தார். தொடர்ந்து 1967 முதல் 1971 வரை வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்திலும், விளம்பரப் பிரிவிலும் பணியாற்றினார். 1971இல்  பட்டதாரி ஆசிரிய உதவியாளர் நியமனம் பெற்று ஆங்கில ஆசிரியராக புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் பணியாற்றினார். 1976இல் பட்டதாரி ஆசிரியராக நியமனம் கிடைத்தது. 1980இல் ஆரம்பித்த பொது வேலைநிறுத்தத்தில் இவரும் பங்கேற்றதால் வேலையிழந்தார்.

மீண்டும் 1982லேயே பணியில் அமர முடிந்தது. மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்துக்கு நியமனம் கிடைத்து சில நாள்களிலேயே மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார். 1987வரை அப்பாடசாலையில் கடமையாற்றிய இவர் அவ்வாண்டு கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று 2000ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை அங்கு கடமையாற்றினார். 27வருட ஆசிரிய சேவையில் ஆங்கிலம், விஞ்ஞானம், சுகாதாரம் ஆகிய பாடங்களைக் கற்பித்ததோடு, இலக்கியத்துறையில் வழிப்படுத்தலையும் செய்து நன்மாணாக்கர்களை உருவாக்கியிருக்கிறார்.

இந்துக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் சிவராமலிங்கமும் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் விரிவுரையாளர் ஜெகநாதாச்சாரியரும் இவரை  இலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்தியிருந்தனர். கூடவே இவரது பரம்பரைத் தமிழ்ப்புலமையும் கைகொடுத்தது.
1970இல் வீரகேசரியில் வெளிவந்த நாணயம் சிறுகதையுடன் இவரது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது. தொடர்ந்து வீரகேசரி, உதயன், மல்லிகை, பூரணி, அலை, திசை, நங்கை, அஞ்சலி, தாயகம், வெளிச்சம், நங்கூரம், மூன்றாவது மனிதன், கலைமுகம், மகுடம், எதுவரை, ஜீவநதி, தூண்டி, தெரிதல் முதலான பத்திரிகைகள், இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
இவரது 6 சிறுகதைகள் கொண்ட மாற்றம்(1980),  8 சிறுகதைகள் கொண்ட உலா (1992), நீளும் பாலை குறுநாவல் மற்றும் ஏற்கனவே வெளிவந்த 12 சிறுகதைகளைக் கொண்ட சட்டநாதன் கதைகள்(1995), 13 சிறுகதைகள் கொண்ட புதியவர்கள்(2006), 12 சிறுகதைகள் கொண்ட முக்கூடல் (2010), 12 சிறுகதைகள் கொண்ட பொழிவு(2016), 10 சிறுகதைகள் கொண்ட தஞ்சம்(2018) ஆகியன நூல்களாக வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏ.ஜே.கனகரத்னா, சி.கனகநாயகம், சோ.பத்மநாதன், கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பத்து சிறுகதைகள் The Shower(2020) என்ற நூலாக வெளிவந்துள்ளது.
கவிதைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் நீரின் நிறம் (2017), துயரம் தரும் அழகு(2019) ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவல் உயிரில் கலந்த வாசம்(2020) பால்ய காலத்தை நினைவுகூரும்  இயல்பான கிராமத்து வாழ்வையும், உணர்வனுபவங்களையும் பேசுகின்றது. இவர் எழுதிய பல்வேறு இலக்கியக் கட்டுரைகள் சட்டநாதன் கட்டுரைகள்(2021) நூலாக வெளிவந்துள்ளது.
கலை இலக்கிய விமர்சன இதழான பூரணியை(1972) என்.கே.மகாலிங்கத்துடன் இணையாசிரியராக இருந்து வெளிக்கொணர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட ரசனை மிக்கவராகவும் இவர் விளங்கினார்.
சட்டநாதனின் கதைகள் இயல்பான குடும்ப வாழ்வையும், அகச் சிக்கல்களையும் பேசுவன. கிராமத்து மாந்தர்களை இயல்பான பாத்திரங்களாக வார்த்து, சொற்சிக்கனத்தோடு நளின நடையில் கதையை நகர்த்திச் செல்வதில் சட்டநாதன் முக்கியத்துவம் மிக்க படைப்பாளியாக விளங்குகிறார். தி.ஜானகிராமன் போல பாலியல் சார்ந்த விடயங்களை, மென்மையான உணர்வுகளை தனது கதைகள் ஊடாக நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்துள்ளார். பெண்களை, குழந்தைகளை உயர்வாகச் சித்திரிக்கும் வகையிலும் இவரது படைப்புகள் முக்கியத்துவமுடையவை.

‘எனது கதைகளில் வரும் பெண்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் நின்றபடி தலைநிமிர்ந்து பார்ப்பவர்கள். சரியெனப்படுவதைத் தீர்மானமாகச் செய்பவர்கள். எனது எழுத்தின் அடிச்சரடாய், தொடரிழையாய் இருப்பது இப்பெண்கள் பற்றிய அக்கறையும், அவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளிக்கொணரும் முயற்சிதான்’என்று சட்டநாதன் குறிப்பிடுவது அவரது கதைகளின் பிரதான பாத்திர வார்ப்பைத் துலாம்பரப்படுத்துகின்றன.
‘பிளிறிக் கொண்டு அட்டகாசம் செய்யும் யானையைப் போலன்றி, மிக அடக்கமாகவும் மனிதத்தன்மையோடும் பாத்திரங்களை நோக்கி அவர்களின் உறவுகளினூடாக சமுதாயத்தைப் பற்றி குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சமூகத்தைப் பற்றி நாசூக்காக சிந்திக்கத் தூண்டினார்’ என இவரது கதைகள் தொடர்பில் ஏ.ஜே.கனகரத்ன குறிப்பிட்டது முக்கியமானதாகும்.

83 வயதில் ஆயிரம் பிறை கண்டு வாழும் சட்டநாதன் அடிப்படையில் சிறந்த – தொடர்ந்த - வாசகர். அந்த வாசிப்பே அவரது படைப்புகளின் உயர்தரத்துக்கும் அடிப்படையானது. தொடர்ந்தும் அவரது இலக்கியப் பங்களிப்பை ஈழத்தவர்கள் நுகரும் வாய்ப்பு கிட்ட வேண்டி வாழ்த்துகிறோம்.

உதயன் சஞ்சீவி 15-10-2023








No comments:

Post a Comment