யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்ல மூன்று ஆறுகள்
இயல்வாணன்
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். மலைகளில் திரளும் மேகம் ஒடுங்கி மழையாகப் பொழிந்து, அந்த நீர் அருவியாகப் பாய்ந்து, அருவிகள் ஒருங்கு சேர்ந்து ஆறாகி, அந்த ஆறு தான் போகும் இடங்களுக்கு அழகையும் செழிப்பையும் கொடுத்துச் செல்லும். காவியங்கள் யாவற்றிலும் நதிகள் பிரதான பகைப்புலமாகவும், பாடுபொருளாகவும் இருந்துள்ளன. இராமாயணத்தில் சரயு நதியும் கங்கை நதியும் பிரதானமாக வருகின்றன. வான்மீகி இராமாயணத்தில் 49 நதிகள் பாடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் காவிரி நதி வருகின்றது. மதுரைக் காஞ்சியில் வைகைநதி வருகிறது. ஈழத்து இலக்கியத்தில் மகாவலியும், களனி கங்கையும் மாணிக்க கங்கையும் வந்துள்ளன.
‘பூங்குறிஞ்சி முகட்டினிலேறி பொழிந்த தௌ;ளமு தாகிய வெள்ளம் பாங்கிலாத பரத்தையை நாடி படருவோரிற் பரந்தது பள்ளம்’ என்று நவாலியூர் சோமசுந்தரப் புலவர் மலையிலிருந்து அருவி தவழ்ந்து வந்து ஆறு உருவாவதை விபரிப்பார். தனித்த தீபகற்பமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் இத்தகைய மலையருவி ஆறுகள் எவையுமில்லை.
யாழ்ப்பாணத்தில் கீரிமலை, கம்பர்மலை, கதிரமலை என்று மலையில் முடிகின்ற இடங்கள் இருப்பினும் இவை மலை என்று சொல்லக்கூடிய தகுதியைக் கொண்டிருப்பனவல்ல. ஒரு பிட்டியாக, மேடாக இருந்ததால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம். அவ்வளவுதான். ஆற்றை உருவாக்கும் மலைகள் இல்லாவிடினும் ஆறில்லா ஊராக யாழ்ப்பாணம் இருக்கக்கூடாதென எமது முன்னோர்கள் கருதினரோ என்னவோ யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்ல மூன்று ஆறுகளைச் சொல்லிக் கொள்கின்றனர். தொண்டைமானாறு, உப்பாறு, வழுக்கையாறு என்பனவே அவை மூன்றுமாகும்.
தொண்டமானாறு
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்கே வடமராட்சி கிழக்கில் உள்ள ஆழியவளையை அடுத்துள்ள மண்டலாய் என்னுமிடத்தில் ஆரம்பமாகும் தொண்டமானாறு மருதங்கேணி, செம்பியன்பற்று, நாகர்கோவில், அம்பன், குடத்தனை ஆகிய ஊர்களையும் வளப்படுத்தி, முள்ளிப் பாலத்தை ஊடறுத்து மண்டான் வழியாக முப்பது மைல்கள் ஓடி தொண்டமானாறு என்ற பெயருடைய ஊரில் அக்கரை கடற்கரையை அண்டி கடலில் கலக்கிறது. இது உப்புநீரைக் கொண்டது. இதன் நீர்ப்பரப்பு 7300 ஏக்கர் அளவுடையதாகும். தொண்டைமானாறு, தொண்டைமன்னன் வடிகால் என்றும் இது அழைக்கப்படுகிறது. வல்லி நதி என்ற பெயரும் இதற்குண்டு. புகழ்பெற்ற செல்வச் சந்நிதி ஆலயம் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
திருச்செந்தூரில் இருந்து முருகப்பெருமான் வீரவாகு தேவரை மகேந்திரபுரிக்கு சூரபன்மனிடத்து தூது அனுப்பியதாகவும், வீரவாகுதேவர் இலங்கையின் வல்லிநதிக் கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார் என்றும், மீண்டும் திரும்பிச் செல்வதற்கு இதே இடத்துக்கு வந்த போது சந்திக் காலம் ஆகிவிட்டது என்றும், அதனால் முருகப்பெருமானுக்குரிய சந்திப் பூசையை இந்த இடத்தில் செய்தார் என்றும், அந்த இடமே சந்நிதியாக மருவி இன்று செல்வச்சந்நிதி முருகன் ஆலயமாகத் திகழ்கிறது என்றும் ஆலய வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.
பண்டிதர் சச்சிதானந்தன் எழுதிய யாழ்ப்பாணக் காவியம் 3 பருவங்கள் 38 படலங்கள் 278 பக்கங்கள் கொண்ட உயரிய காவியமாகும். அக்காவியத்திலும் தொண்டமானாறு வருகின்றது. கனகசிங்கையாரியனின் புதல்வர்கள் பரராசசேகரனும், செகராசசேகரனும் தமிழ்நாட்டில் கரந்துறைந்து போர்ப்பயிற்சிகள் பெற்று தொண்டமானாற்றின் அருகே சின்னமலை என்ற இடத்திலேயே வந்திறங்குவதாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
தொண்டைமான் என்ற மன்னன் இந்தப் பகுதியில் விளையும் உப்பினை மரக்கலங்களின் வழியாக எடுத்துச் செல்வதற்கும், உள்ளுர் போக்குவரத்துக்குமாக இதனை வெட்டியதாகவும் கர்ணபரம்பரைக் கதைகளாகக் கூறப்பட்டுள்ளது. உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் தொண்டமானாறு முக்கிய பங்காற்றுகிறது. யாழ்ப்பாணத்துக்கான குளம் என்ற குடிநீர்த் திட்டத்தை தொண்டமானாறு ஆற்றை இடைமறித்து நீரைத் தேக்கி ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
உப்பாறு
பெயருக்கேற்ப உப்புநீரைக் கொண்டுள்ள இவ்வாறு புத்தூருக்கும் சரசாலைக்கும் இடையே அமைந்துள்ள கப்புதூ என்ற இடத்தில் ஆரம்பமாகி, 12 மைல் தூரம் ஓடி நாவற்குழியில் கடலில் கலக்கிறது. இதனுடைய நீர்ப்பரப்பு 6400 ஏக்கரகும். வெள்ளநீர் வெளியேற்றத்துக்கு பயன்படும் இவ்வாற்றில் மழைகாலத்தையண்டிய குறித்த காலப்பகுதியில் மீன்பிடி நடைபெறும். மழைக்காலத்தில் வண்ணாத்திப் பாலம், கோப்பாய் பாலம், நாவற்குழிப் பாலம் ஆகியவற்றின் கீழாக இவ்வாறு பாய்கிறது.
வழுக்கையாறு
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரேயொரு நன்னீர் ஆறு வழுக்கையாறு. ஒரு வாய்க்கால் அளவுக்கு இன்று சுருங்கிப் போயுள்ள இந்த ஆறு அளவெட்டி பினாக்கைக் குளத்தில் ஆரம்பமாகி ஆறு மைல்கள் பயணித்து அராலியில் கடலில் கலக்கிறது. ‘யாழ்ப்பாண மாதா மலடியென்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சை மூலம் பெற்றெடுத்த குழந்தையிது’ என்று இரசிகமணி கனக செந்திநாதன் இவ்வாற்றின் பிறப்பைப் போற்றுவார்.
தெல்லிப்பழை, அம்பனை, பன்னாலை பிரதேசங்களில் மழைக்காலத்தில் சேரும் உபரிநீர் அளவெட்டிப் பினாக்கைக் குளத்தை வந்தடையும். பினாக்கைக்குளம் நிறைந்தவுடன் வழுக்கையாறு ஆரம்பமாகி பெருமாக்கடவை, கந்தரோடை, சங்குவேலி, சண்டிலிப்பாய், நவாலி வழியாக உள்ள குளங்களையும் நிறைத்து அராலியைச் சென்றடைகிறது.
இலக்கியத்தில் சிறப்புப் பெற்ற ஆறாகவும் இது விளங்குகிறது. செங்கை ஆழியான் எழுதிய ‘நடந்தாய் வாழி! வழுக்கியாறு’ என்ற நடைச்சித்திரத்தின் மூலமே இது இலக்கிய ஆவணமாகியுள்ளது. சிரித்திரன் வெளியீடாக வெளிவந்த இந்நூலின் கதைக்களம் வழுக்கியாறு ஆரம்பமாகும் இடத்தில் இருந்து முடிவுறும் இடம்வரை இடம்பெற்றுள்ளது. தொலைந்த மாட்டைத் தேடும் படலமாக ஆரம்பிக்கும் இந்நடைச்சித்திரம் ஒரு குறுநாவல் போல சம்பவ விபரிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது. இயல்வாணனால் கவிதையொன்றும் இவ்வாறு தொடர்பில் எழுதப்பட்டுள்ளது.
கந்தரோடையை மையமாகக் கொண்டு கதிரமலை இராச்சியம் நிலைபெற்றிருந்ததை வரலாறு கூறுகிறது. உக்கிரசிங்கன் என்ற மன்னன் கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்து வந்தான் என்றும், இலகுவான போக்குவரத்துக்காக இந்த வாய்க்கால் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழுக்கையாற்றுப் படுகையில் தொல்பொருள் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலங்களில் நீரைச் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் வெள்ளநிலைமை, பயிரழிவு, மலேரியா முதலான நோய்களின் தாக்கம் காரணமாக வெள்ளநீரை கடலுக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 90ஆயிரம் ஏக்கர் அடி நீர் ஒரு மழையாண்டில் கிடைப்பதாகவும், அதில் 40ஆயிரம் ஏக்கர் அடி நீர் விவசாயம், குடிநீர், இதர தேவைகளுக்குப் பயன்படுவதாகவும், 50ஆயிரம் ஏக்கர் அடி நீர் வீணாக கடலில் புகுவதாகவும் புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. அத்தகைய உபரி நீரைக் கடலுக்கு அனுப்புவதில் இந்த மூன்று ஆறுகளும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன.
ஆறே! வழுக்கை நீ வாழ்க!
ஓடும் மேகம் ஒன்றாகி மலையில்
கூடும் வண்மை கண்டிலையே!
மூடும் பாறை மேலே ஊற்றாய்
பீறும் தகையும் கொண்டிலையே!
காரும் கறுத்து வானிடிய மழை
தூறும் பொழுதில் நீயுயிர்ப்பாய்.
பேரும் கொண்டாய் ஆறெனவே
பெருந்தாய்! வழுக்கை; நீ வாழ்க.
மண்ணும் குளிரவுன் மடி பெருக்கும்
மெல்ல நடந்து சென்றிடுவாய்.
நண்ணும் கரையின் சுற்றந் தழுவி
நுரைத்துச் சிரித்துச் சென்றிடுவாய்.
பொன்னும் பொருளும் சீர் கொண்டு
போவாய் ; காதற் கடல் சேர
வண்ணங் கொண்டெமை வளமூட்டும்
வடிவே! வழுக்கை; நீ வாழ்க.
பாதை மருங்கில் அணி வகுத்துப்
பூத்துக் குலுங்கும் மரக்கூட்டம்
தாதை இறைத்து மணமூட்டும்
தழுவிக் காற்று தாலாட்டும்
கோதையர்கள் குருகி னங்கள்
குளித்துப் புரள்வர் உன்மடியில்
ஓதை உனதோ? கோதையதோ?
ஓதாய்! வழுக்கை; நீ வாழ்க.
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் முதுமொழியை
அழித்து யாழ்ப்பாண மங்கைக்கு
பேறாய் உதித்துப் பேர் போக்கினையே!
பேரரசு கதிரமலை நிலைநிற்க எல்லைச்
சீராய் நின்றாய்! உக்கிரசிங்க மன்னன்
நாவாய் நகர்ந்து பொருள் தேட
ஆறானாய்! வளநகராய் ஆக்கும் நல்ல
சூரானாய்! வழுக்கை; நீ வாழ்க.
அம்பனை வெளியின் நீர் சேர்ந்து
ஆடிப் பினாக்கைக் குளஞ் சேர
வந்தனை; பெருமாக் கடவையின் வழியே
கந்த ரோடையில் இளைப்பாறி - மெல்லச்
சங்குவேலியுள் நுழைந்து வயல் விரித்த
சண்டிலிப்பாயில் உறங்கி எழுந்து
சங்கரத்தையில் ஏறி அராலியில் நுழைந்தாய்
காணலையே! வழுக்கை; நீ எங்கே?
இயல்வாணன்
கலைநிலம் வலி.தெற்கு கலாசார பேரவை மலர் 2018