Saturday, July 27, 2019

கவிதை -பூனையும் பூனைக்குட்டியும்





நான் சிறுவனாயிருந்த போது

வாழ்க்கை

ஒரு பூனைக்குட்டியாகி இருந்தது.

அது அடிக்கடி வந்து

தன் மென்மையான வாலால்

என்னை நீவியது.

அதன் ஸ்பரிசத்தால்

என்னைத் திளைக்க வைத்தது.

தன் உடம்பைச் சிலிர்த்தபடி

உற்சாகத்தோடு வந்து

விளையாட அழைத்தது.

குத்தென நிமிர்ந்த மரங்களில்

தாவிப் பாய்ந்து

என்னையும் உயரத்துக்கு

நகர்த்தியது.

வசீகரம் மிளிரும்

கண்களை உருட்டி

குரலை உயர்த்தி

தாளமிட்டுப் பாடியது.

என்னையும்

இரு கை சேர்த்தழைத்து

நடனமாடியது.

00

வாழ்க்கை

இப்போது படுத்திருக்கிறது

ஒடுங்கிப் போய்

ஒரு மூலையிலே.

அதன் உரோமங்கள்

ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது.

ஈனக்குரலில் அது

கடந்த காலத்தை முணுமுணுக்கிறது.

துர்நாற்றமடிக்கும் தனதுடலை

அசைக்க முடியாமல் அல்லாடுகிறது.

அதன் கண்களில்

மரணதேவனின்

அச்சமூட்டும் விம்பம் படிகிறது.

தனது இயலாமையை வெளிப்படுத்தியபடி

நோயாளியாய் முடங்கியிருக்கும்

என்னை

நோக்கியபடி இருக்கிறது அது.

                    ஜீவநதி கார்த்திகை-மார்கழி 2007

No comments:

Post a Comment