Tuesday, July 30, 2019

கருணாகரன் : கிராமத்தின் வேரறா மனிதன்.

கருணாகரனின் இப்படியும் ஒரு காலம் நூலுக்கான அணிந்துரை


ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வேர் பதிந்த கிராமங்களின் மீதும், அதன் இயற்கையான சூழமைவு மீதும், அங்கு வாழும் உயிர்ப்பான மனிதர்கள் மீதும் தீராக் காதலும், கடந்த கால வாழ்வின் கழிவிரக்கமும் உண்டு. அதுவே படைப்பாளிகளிடம் பகைப்புலமாகவும், வர்ணனை களாகவும், கதாமாந்தர்களாகவும் புலக்காட்சி பெற்று தரிசனமடைகிறது. 

கருணாகரன் முக்கியமான கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். இந்தப் பன்முகங்களுக்கும் அப்பால் அவர் கிராம வாழ்வை ஆழமாக நேசித்து, அதற்குள் ஊடாடி வருபவர். நகர வாழ்வு, அறிவும், அதிகாரமும் செல்வாக்கும் பெற்ற மனிதர்களின் நட்பு என்ற எல்லைகளுக்கு அப்பால் கிராமிய மனிதர்களுடன், அவர்களில் வயது வேறுபாடோ, தொழில் வேறுபாடோ, வேறெந்த வேறுபாடோ கருதாமல் மெய்யன்போடு உறவாடுபவர். 
இப்படியொரு காலம் நூலின் சிங்களமொழிபெயர்ப்பு

கருணாகரன் என்ற மனிதன் கிராமத்தின் வேரறா மனிதன். போலித்தனமல்லாத கிராமிய மனிதக் காட்டுரு. அவருள் இருந்து கிராமத்தின் ஜீவனைப் பிரிக்க முடியாது. அதுவே அவரது படைப்புக்களான போதும் கிராமங்களை அதன் உயிர்ப்போடு தரிசித்த ஒரு மனிதன் அந்தக் கிராமங்களை வரலாறு, பண்பாடு, அரசியல், பொருளாதார அம்சங்கள் பாதித்த வலிகளை, உருமாற்றங்களை கழிவிரக்கத்தோடு நோக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

கிராமங்கள் என்பது முன்னைய உயிர்ப்போடு இல்லை.இயற்கையின் சீதளத்தோடு ஒன்றித்த வாழ்வு மெல்ல மெல்லச் சிதைந்து விட்டது.வெண்மையாய் மலர்ந்து மணம் பரப்பும் முல்லைப் பூவைப் போல, கஞ்சல் கருக்கல்களோடு பிரவகித் தோடும் காட்டாற்றைப் போல இயற்கையின் மெய்ம்மை குன்றாது, தம்மியல்பு அழியாது வாழ்ந்த கள்ளங்கபடமற்ற மனித வாழ்வு இன்றில்லை. கூட்டுக் குடும்பங்களாய் ஒன்றாய்க் கூடி விருந்துண்டு, சேர்ந்துழைத்து, ஓய்வின் போது கூத்தும் பாட்டுமாய் குதூகலித்து வாழ்ந்த வாழ்க்கை நம்மிடமில்லை.


 வேலிகளும் மதில்களும் எமது காணிகளை மட்டுமல்ல மனங்களையும் இறுகக் குறுக்கி எமக்குள்ளேயே பூட்டுக்களைப் போட்டு விட்டன. வஞ்சத்தையும் சூதையும் தினசரி தொலைக்காட்சிகள் மண்டைக்குள் ஓங்கி அறைகின்றன. முகமிழந்த, மனமழிந்த மனிதர்களாக நாம் மாற நமது வாழ்வு நமக்குக் கற்பிக்கிறது.

இரண்டு தலைமுறைக்கு நீடித்த அமைதியின்மை நமது வாழ்வை எங்கோ கொண்டு சென்று விட்டது. அது சாதகமானதும் பாதகமானதுந்தான். ஆனால் நமது இயற்கையை, அதனோடியைந்த அழகிய வாழ்வை, நம்முள்; ஊறிய நல்ல அம்சங்களை எல்லாம் யுத்தம் நம்மிடமிருந்து பிடுங்கி விட்டது.

 அந்நிய தேசங்களிலிருந்து வரும் பணம் எங்கள் சிலரது குடிசைகளை மாடமாளிகைகளாக்கியிருக்கிறது. மாடமாளிகைக் கனவுகளில் மூழ்கி ஏனைய குடிசைவாசிகள் பெரும் பிரயத்தனப்படுகின்றனர். லீசிங், லோன், அடகு, சீட்டு என்று எங்களவர் பலரது வாழ்வு அலைக்கழிகிறது. முடிவு மரணமாகவோ, சிறையாகவோ மாறுகிறது. விளம்பரங்களுள் அள்ளுண்டு அந்தரிக்கும் வாழ்வையே காலம் நமக்குப் பரிசளித்திருக்கிறது. அது அரசியலிலுந்தான்.

கருணாகரனுடைய இந்தக் கட்டுரைகளைப் படித்து முடிந்ததும் கடந்த காலத்தைய கழிவிரக்கம் மனதைப் பிசைகிறது. அது மட்டுமன்றி வரலாற்று பரிணாமத்தில் நடந்து முடிந்தவைகள் மனதை நெருடுகின்றன. 

கிளிநொச்சி பற்றிய முதற் கட்டுரை ஒரு கவிதை போல நகர்கிறது.ஒரு காடாக இருந்த அந்த நகரம் ஒரு குழந்தையைப் போல எழுந்து எழுந்து விழுந்து விழுந்து மீண்டும் எழுந்த கதை கவிதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தலைமுறைக் கேள்விகளைக் கடந்து அது எழுந்த கதை சுவாரஸ்யங்குன்றாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அது போலவே இரவில் உயிர் பெற்றுப் பகலில் உறங்கிய கிளாலிக் கதை உலகத்தவர் நம்ப மறுக்கும் உண்மைக் கதை. அது உயிரோட்டத்தோடு தத்ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவமடு, கண்டாவளை, அக்கராயன், செம்மணி, நந்திக்கடல் என்று நீளும் இந்த இடங்களின் கதைகள் வெறுங்கதைகள் அல்ல. இவை மனிதர்களின் பாடுகளைச் சொல்கின்றன. முள்முடி குத்திச் சிலுவை சுமந்த வரலாற்றைப் பேசுகின்றன. தெளிந்த சிற்றோடைகள் திடீரெனக் காட்டாறாகி உன்மத்தம் கொண்டழித்த காலங்களின் துயரை எடுத்துரைக்கின்றன.

இவை மற்றவர்களின் கூற்றுக்களை வைத்து எழுதப்பட்டவைகள் அல்ல.  இந்தக் கிராமங்களில் வாழ்ந்து, புழுதி வாசத்தைச் சுகித்து, பாடுகளை அனுபவித்து, அந்த வாழ்வை  விமர்சனபூர்வமாக அணுகி, புறநிலை உண்மைகளையும் உட்புகுத்தி கருணாகரன் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

ஒரு கவிஞனிடத்தில் இருந்து வெளிப்படும் சொற்களில் இருக்கும் கவித்துவம் இந்தக் கட்டுரைகள் முழுமையும் வெளித்தெரிகின்றன. நாமே அறியாத நம்மைப் பற்றிய வாழ்வை நமது கிராமங்களிலிருந்து தரிசனங் கொள்ள வைக்கின்றன இந்தக் கட்டுரைகள். நீள நினைந்திடும் வாழ்வை இவற்றினூடாக கருணாகரன் நம்முள் உட்பொதிக்கிறார்.இது காலத்தினால் செய்த உதவி.அதற்காக அவருக்கு தலைமுறைகளின் நன்றி என்றுமிருக்கும்.

இயல்வாணன்

சு.ஸ்ரீகுமரன்
வலயக் கல்வி அலுவலகம், 
கிளிநொச்சி.

No comments:

Post a Comment