Saturday, July 27, 2019

கவிதை -சலனப் பொழுதின் படிமத் தோற்றம்


நான் ஒரு ஓவியக்காரனல்ல.
வண்ணங்களோ தூரிகைகளோ
என்னிடமில்லை.

எனது கண்களில்
ஓவியங்கள் துளிர்க்கின்றன.

பனி விலகும் காலையில்
உதிர்ந்த இலைகளால் போர்வையிடப்பட்ட தரையில்,

என் சின்ன மகள்
தன்னிச்சையாய் கிறுக்கிய
சுவர்க்கோடுகளில்,

புத்தகத்தினுள் சுவடாய்ப் பதிந்த
சிறு பூச்சியில்,

ஆலயத் தரையில் சிந்திக் காய்ந்த
பறவையின் எச்சத்தில்,

சூரியன் மறைந்து சிவந்த
சலனமற்ற மேற்கு வானில்

என் கண்கள் நுழைந்து
ஓவியங்களைத் துளிர்க்கச் செய்கின்றன.

00

துளிர்த்து மலர்ந்த ஓவியங்கள்
கண்களின் வழியே
மனதினுள் இறங்குகின்றன.

அங்கே அவை கவிதைகளாகின்றன.

கவிதைகள்
கடந்த காலத்தை நினைவு கூருகின்றன.

நிகழும் அரசியலைப் பேசுகின்றன.
புதிதாய் 
தத்துவங்களை உதிர்க்கின்றன.

திடீரென
எல்லாமழிந்து சூன்யமாகின்றது.

சூன்ய வெளியில்
இருளும் இருளின் கோடுகளும்
சுழன்று சுழன்று
புதிய புதிய ஓவியங்களாகின்றன.

                    ஜீவநதி வைகாசி-ஆனி 2008

No comments:

Post a Comment