Saturday, July 27, 2019

கவிதை -தனிமையின் தீராப் பக்கங்கள்




இந்த இரவில்
தனிமையின் தீராப் பக்கங்களை 
அவள் எழுதிக் கொண்டிருந்தாள்.

வாழ்வு காற்றெனவானது.
காலமுழுதும் வீசியாடுவது

தென்றலாய் வீசிப் பின்
புயலெனச் சுழன்றடித்து
ஓய்ந்து நீள்வது.

வசந்தந்தங்களைத் தந்து
பிடுங்கிச் சுழல்வது.

இலைகள் உதிரும் காலத்தைப்
பரிசளித்து மறைவது.

ஒவ்வொரு இரவிலும்
உதிர்கின்றன இலைகள்.

தனிமையின் பக்கங்களில்
நிறைகின்றன
ஏக்கங்களும் துயரங்களும்.

சபிக்கப்பட்ட வாழ்வு குறித்தான
பாடல்களைக் கடந்தாயிற்று.

இன்றைய இரவு கொடுமையானது!
இனிவரும் இரவுகளும் அவ்வாறே.

ஒற்றைப் புரவியில் வரும் இராஜகுமாரர்கள்
காணாமல் போகும் செய்தியுடன்
காலைகள் விடிகின்றன.

தூக்கம் மறவாக் குழந்தைகளின்
சலனமற்ற முகங்களில்
நாளைய கனவுகள் நெளிகின்றன.

புதிரான வாழ்வின் முடிச்சை 
அவிழ்க்கும் வகையற்று
தலையணையில் கண்ணீர் உறைகிறது.

தனிமையின் தீராத பக்கங்களை 
அவள் 
தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறாள்.

                            19-09-2016

No comments:

Post a Comment