Thursday, July 25, 2019

கவிதை -ஒவ்வாச் சுழிக்கிடையே


இன்று பூரணை.

நிலவெழுந்து ஒளி சிந்தி
எனை அழைத்தது.

யன்னலில் முகம் புதைத்து 
அழுதேன் நான்.

அழகிய வெண்ணிலவே,
உன்னுடன் கூடிக் களிக்க 
ஒரு காலம் வாய்த்திருந்தது நமக்கு.

ஒளி ஒழுகும் அந்நேரம்
நீள்பொழுதில் சம்மணமிட்டிருந்து
பல கதையும் பேசியிருப்போம்.

மிக மகிழ்வோடே
ஆனந்தப் புனலாடியிருப்போம்.

தெரு வழியே
அன்பூறும் பாடலிசைத்து உலாவியிருப்போம்.

திடீரென,
நம்மை உலுக்கும் ஊழி பிறந்திட
காலம்
விழுந்திருக்கிறது துன்பச் சுழிக்குள்.

ஊழியின் சாபத்தில் சிக்கி
நமது பூமி ஒடுங்கியிருக்கிறது 
ஒரு தெருநாயைப் போல.

அதன் மூச்செழுந்து
ஆங்காங்கே தீ மூட்டியிருக்கிறது
பச்சை வயல்களின் மீது.

உயிர் கருகும் நாற்றஞ் சுமந்து
காற்றலைகிறது வாசல் தோறும்.

கணத்துக்குள்
மகிழ்வின் சுவடழிந்து போன 
நீறெழும் சாலைகளில்
துயரத்தின் பாடலே நிறைகிறது.

புலன் விறைத்துப் போய்
மனிதர்கள் துயின்றிருக்கிறார்கள்.

பிரமையென
வாழ்க்கை எதிர்கொள்கிறது நாள்களை.

நானும் கட்டுண்டிருக்கிறேன் இந்தச் சுழிக்குள்.

வெளியே வருவதற்கு அனுமதியில்லை.

என் செய்வேன் நிலவே!
புலனறுந்து இங்கே 
பிணக் குழிக்குள் கிடக்கும் நான்.

                                                     சஞ்சீவி  26-07-1997

No comments:

Post a Comment