Monday, July 29, 2019

அறிவாலயத்துக்கு அகவை ஐம்பது


இன்று உள்நாட்டிலும், புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழ்பவர்களில் கணிசமானோரது  அறிவு விருத்திக்கும், ஆன்ம விருத்திக்கும் காலாக இருந்த அறிவாலயம் சுன்னாகம் பொது நூலகமாகும். இந்த நூலகம் ஐம்பது ஆண்டுகள் அறிவொளி பரப்பிய ஆலமரமாக நிமிர்ந்து நின்று பொன்விழாவைக் கொண்டாடியுள்ளது. அதனை மேலும் வளர்த்தெடுத்து நமது அறிவுப் பொக்கிசமாகப் பேண வேண்டியது நம் எல்லோரதும் கடமையாகும்.

உள்ளுராட்சி மன்ற எல்லைகள் மறுசீரமைப்பின் கீழ் 1964 ஜனவரி 01 முதல் சுன்னாகம் பட்டின சபை இயங்க ஆரம்பித்தது. செனட்டர் பொ.நாகலிங்கம் தலைமையிலான சபை சுத்தமான, மின்னொளி வசதியுடனான நகரமாக சுன்னாகத்தை ஆக்கியதுடன் வீதிகளுக்கு பெரியார்களது பெயர்களைச் சூட்டியதுடன் சுன்னாகம் பொது நூலகத்தையும் ஆரம்பித்தது. 

காங்கேசன்துறை வீதியில் ஆயுர்வேத வைத்தியர் தம்பையா அவர்களது இல்லத்தில் 1964 ஒக்டோபர் முதலாந் திகதி ஆரம்பிக்கப்பட்ட நூலகத்தை அப்போதய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு.நெவில் ஜெயவீர திறந்து வைத்தார். பத்திரிகைகள், சஞ்சிகைகளுடன் உசாத்துணைப் பகுதியும் ஆரம்பத்தில் செயற்பட்டன.

ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம் தலைமையில் ஆய்வு வட்டம் (Study Circleசெயற்பட்டதோடு ஒவ்வொரு போயா தினத்திலும் பல்வேறு அறிஞர்களின் உரைகளும் இடம்பெற்றமை முக்கியமானதாகும். பின்னர் நூலகம் பண்டிதர் சிவசம்பு அவர்களது இல்லத்துக்கு இடம் மாற்றப்பட்டது. அக்காலத்தில் சமய வகுப்புக்களும் இடம்பெற்றன.

 1972இல் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி.எம்.குமாரசாமி அவர்களின் காணியில் இருந்து 3 பரப்பு கொள்வனவு செய்யப்பட்டு, நூலகம் கட்டப்பட்டு 1972 ஜுன் ஐந்தாந் திகதி அப்போதய உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். அல்விஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி, சபை நிதி ஆகியவற்றைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுநூலகம் பல்வேறு காலங்களிலும் பல்வேறு தரப்பினரதும் பங்களிப்புடன் வளர்ச்சியும் விருத்தியும் பெற்று, யாழ்ப்பாணத்தின் சிறப்பு மிக்க நூலகமாக மிளிர்கின்றது. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த நிலையில் புத்தக இழப்பையும் நூலகம் சந்தித்தது. எனினும் மிடுக்கோடு முன்னேறிய நூலகம் இன்று 23ஆயிரத்து 200 நூல்களுடன் வளர்ச்சி கண்டுள்ளது. 3402 அங்கத்தவர்களும், 498 சிறுவர் அங்கத்தவர்களும் இரவல் பெற்று நூல்களைப் பயன் படுத்தி வருகின்றனர். அத்துடன் பத்திரிகைப் பகுதி, உசாத்துணைப் பகுதி, இரவல் வழங்கும் பகுதி என்பன சிறப்பாக இயங்கி வருகின்றன.

2007ஆம் ஆண்டு நூலக ஆவணமாக்கல் சபையால் தரம் 2 நூலகமாகத் தரம் உயர்த்தப்பட்ட இந்நூலகம் அவ்வாண்டு சிறப்பு விருதினையும் பெற்றுக் கொண்டது. அத்துடன் 2009ஆம் ஆண்டு பிரதேச மக்களின் அறிவு விருத்தி மற்றும் தகவல் தேடல் திறனை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு உயர்தர நூலக சேவையொன்றை நடத்திய பங்களிப்புக்காக தேசிய நூலகத்தால் சிறப்புத் திறன் விருது வழங்கப்பட்டது.

2011,2012ஆம் ஆண்டுகளில் தேசிய வாசிப்பு மாத செயற்திட்டங்களுக்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட நூலகம் 2013ஆம் ஆண்டில் வடமாகாணத்தின் சிறந்த நூலகமாக கல்விச் சேவைகள் அமைச்சால் தெரிவு செய்யப்பட்டதுடன் சுவர்ண புரவர விருதினையும் தட்டிக் கொண்டது.
இத்தகைய வெற்றிக்குப் பின்னால் இக்காலத்தில் நூலகராக இருந்த க.சௌந்தரராஜன் ஐயர் அவர்களது பங்களிப்பு குறித்துரைக்கத் தக்கதாகும். இவர் ஆசிரியராக இருந்து வெள்ளிமலை என்ற சஞ்சிகையை வெளியிட்டார். வெள்ளிமலை 2007 முதல் 2012 வரை 12 இதழ்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய சுன்னாகம் பொது நூலக பொன்விழா மலரும் இவரால் தொகுக்கப் பட்டுள்ளது. அத்துடன் ஞானவிலாசம் என்ற கலை, இலக்கிய கருத்தாடல்களும் இவரது காலத்தில் நடத்தப்பட்டதுடன் பிரதேச அறிஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

சுன்னாகம் பொதுநூலகத்தின் இன்றுள்ள பிரதான பிரச்சினை இடநெருக்கடியே. 3 பரப்பு காணிக்குள் 2814 சதுர அடி மாடிக் கட்டடத்துக்குள் எல்லாவற்றையும் அடக்குவது சாத்தியமானதல்ல. அருகில் உள்ள சட்டத்தரணி கு.விஸ்வலிங்கம் அவர்களது காணியில் ஒரு பகுதி கொள்வனவாகவோ, அன்பளிப்பாகவோ பெறப்பட வேண்டும் என்பதுடன் தற்போது உள்ள கட்டடம் போல புதிதாக கட்டடம் அமைக்கப்படவும் வேண்டும்.

 மேலும் நவீன நூலக வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மின்னூலகப் பயன்பாடு, எண்ணிம நூலகப் பயன்பாடு என்பன உருவாக்கப்பட வேண்டும். அது மட்டுமன்றி ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், இந்தியாவிலும் வெளியிடப்படும் ஈழத்தமிழ் நூல்கள் அனைத்தும் கொள்வனவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமன்றி பிரதேசத்தின் கல்வெட்டுக்கள், சமூக நிறுவனங்களின் மலர்கள், அரும்பொருட்கள் என்பவற்றைப் பேணும் ஆவணக் காப்பகம் ஒன்றும் இந்நூலகத்தில் உருவாக்கப்பட வேண்டும். 

இதற்கப்பால் பிரதேசத்தின் வரலாறு கூறும் நூல்கள் பல இடங்களிலும் வெளியிடப்பட்டுள்ள போதும் சுன்னாகத்துக்கென்று ஒரு வரலாற்று நூல் இதுவரை வெளிவரவில்லை. அதுவும் வெளிவருவது காலத்தின் தேவையாகும். அத்துடன் வரத பண்டிதர், முத்துக்குமார கவிராயர், முருகேச பண்டிதர், குமாரசாமிப் புலவர் என நீளும் பிரதேச படைப்பாளிகளின் நூல்கள் மீள் பதிப்புச் செய்யப்பட வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

சு.ஸ்ரீகுமரன்
கனடா சுன்னாகம் ஒன்றிய மலர் 2017






No comments:

Post a Comment