Tuesday, July 23, 2019

இடைவெளிகள்



நண்பனே!
எனக்கும் உனக்கும் இடையில்
எவ்வளவு இடைவெளிகள்!

நானும் நீயும்
எங்கள் தேசத்தில்தான் நிற்கிறோம்.
ஆனால்
இடைவெளிகள் மட்டும்
தொலைதூரத்தில்…

பள்ளிக்குச் செல்லும் தெருக்களில்
பிஞ்சுப் புளியங்காய்களைப் பறித்து
பை நிறையப் போட்டுக் கொண்டு
கை பற்றித் திரிந்த நாட்கள்…

வகுப்புக்குப் போகாமல்
வழுக்கியாற்றில் நீந்திய பொழுதுகள்…
கள்ளமாய் விளாங்காய்க்குக்
கல்லெறிந்த வேளைகள்…
இன்னும் நினைவிலுண்டு.

பச்சை உடையுடன் சந்திகளில் நிற்கும்
பாதகரைப் பீதியுடன் பார்த்து மிரண்டு
ஆமி என்றலறும் என்னைத் தேற்றும்
உன் ஆதரவுக் கைகள்…

ஆமியின் பூட்ஸ் கால்கள் உன்னைப்
பதம் பார்த்த போதும்
கலங்காத உன் விழிகள்…
எல்லாமே நினைவிலுண்டு.

நம் இடைவெளிகள் மட்டும்
தொலை தூரத்தில்…

எனக்கும் உனக்கும்
காதல் பெரரிதானது.
நான் பெண் மேல் காதல் கொள்ள
நீ மண் மேல் காதல் கொண்டாய்.

நான் அவளுடன் சுற்றித் திரிகையில்
இராணுவம் உன்னைத் தேடியலைந்தது.
நீ காட்டில் கரந்துறைந்தாய்!

நான் அவளைக் கைப்பிடித்து
தாலி கட்டிய போது
நீ ஆயுதத்தைக் கைப்பிடித்து
குப்பி கட்டி கொள்கை வழி நடந்தாய்.

நான் என் பின் வழிமுறைகளை
உருவாக்கிய வேளை
நீ உன் பின்னால்
ஒரு தலைமுறையையே
அணிதிரட்டியிருந்தாய்.

நான் வாழ்வுப் பிரச்சினைகளுக்கு
முகம் கொடுத்த வேளை
நீ சமூகப் பிரச்சினைக்குத்
தீர்வு கண்டிருந்தாய்.

நம் இடைவெளிகள் மட்டும்
தொலைதூரத்தில்…

இடம்பெயர் வாழ்வும்
இலக்கின்றிய பயணமுமாய்
நான் ஓட,
இவ்வவல வாழ்வு நீக்க
நீ
இலக்கு நோக்கிப் பயணிக்கிறாய்
கையில் இலகு இயந்திரத் துப்பாக்கியுடன்…

விடிவெள்ளி பூக்கவில்லை
வீதியிருள் தொலையவில்லை

விடியலின் பாடலுக்காய் - உன்
விரலசையும்; தாளமிடும்.
உனதும் உனது தோழரதும்
உறுதி குழைத்த உயிர் விதைகள்
புதிய உலகொன்றைப் பிரசவிக்கும்;;
நாளைய தலைமுறைகள்
அதிலே நிழல் ஆறும்.
உமை நோக்கி
நம்பிக்கைக் கீற்றுடன் நாம்…

எனினும்
நம் இடைவெளிகள் மட்டும்
தொலை தூரத்தில்….

             காலம் எழுதிய வரிகள் ஐப்பசி 1994

No comments:

Post a Comment